புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது தொடர்பாக டில்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: டில்லியில் வரும் நவ.,21 வரை
*அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும்.
*அனைத்து கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
*பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.
*அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து மற்றும் போலீசார் உறுதி செய்வார்கள்.

*15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் குறித்த விவரங்களை போலீசாரிடம் போக்குவரத்து துறையினர் வழங்குவார்கள். அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துவர்.
*பெட்ரோல் நிலையங்களில், சுற்றுச்சூழல் குறித்த சான்றிதழ் தீவிரமாக சோதனை செய்யப்படும்.
*பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 1,000 பஸ்கள் (இயற்கை எரிவாயுவால் இயங்குபவை ) வாங்க நடவடிக்கைகள் நாளை துவங்கும்.
*போக்குவரத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்படும். இந்த குழுவினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவர். இதன் மூலம், வாகன நெரிசலால் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்படும்.
*கோவிட் காரணமாக மெட்ரோ ரயில்கள் மற்றும் டில்லி போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் வாகனங்களில், பயணிகள் நின்று கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனை மறு ஆய்வு செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE