பொள்ளாச்சி: கார்த்திகை மாதம் நேற்று துவங்கியதையடுத்து, பொள்ளாச்சியில், பக்தர்கள் ஆர்வமாக மாலை அணிந்து, ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சபரிமலைக்கு விரதமிருக்கும் பக்தர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து, குருசாமிகளிடம் மாலை அணிந்து, மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்துக்கான விரதத்தை துவங்கினர்.பக்தர்கள் சரண கோஷம் பாடி, சமூக இடைவெளி பின்பற்றி மாலை அணிந்து, ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஐயப்ப சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கார்த்திகை மாதத்தையொட்டி தினமும் காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5:15 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. அதன்பின், காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும், என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில், கார்த்திகை முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தன. ஐயப்ப பக்தர்கள், சுப்புராஜ் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.இதே போன்று, வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலிலும் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் மாலை அணிந்தனர்.உடுமலைகேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மண்டல காலத்தையொட்டி, நேற்றுமுன்தினம் நடைதிறக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று கார்த்திகை முதல் நாளையொட்டி, உடுமலை பகுதியில், பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து, ஒரு மண்டலத்துக்கான விரதம் துவக்கினர்.உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமி ஐயப்பனுக்கு, நேற்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும், கார்த்திகை மாத பிறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE