அன்னுார்: அன்னுாரில் உள்ள, 119 ஏக்கர் குளத்தை பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பை கிடங்காக மாற்றிவரும் அவலத்துடன், நீர் வழித்தடமும் பராமரிப்பு இல்லாததால் சுதந்திரமான தண்ணீர் பயணத்தை தடுத்துவருகிறது.அன்னுார் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி மற்றும், 21 ஊராட்சிகள் உள்ளன. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 119 ஏக்கர் பரப்பளவுள்ள அன்னுார் குளமும், 140 ஏக்கர் பரப்பளவுள்ள குன்னத்துார் குளமும் உள்ளன. இதில், அன்னுார் குளம் பராமரிப்பில்லாததால், குப்பை கிடங்காக மாறி நீர் ஆதாரத்தை கெடுத்து வருகிறது.அன்னுார் விவசாயிகள் கூறியதாவது: அன்னுார் குளம், பேரூராட்சி பகுதியில் துவங்கி, ஒட்டர்பாளையம் ஊராட்சியில் முடிகிறது. மேட்டுப்பாளையம் சாலை ஓதிமலை சாலை என, இரண்டு புறமும் பரந்து விரிந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, 140 ஏக்கர் ஆக இருந்த இக்குளத்தில், ஆக்கிரமிப்பு காரணமாக, 119 ஏக்கராக சுருங்கிவிட்டது. குளத்திற்கு தெற்கு, மேற்கு, வடக்கு பகுதியில் இருந்து மழை நீர் வரத்து உள்ளது.இக்குளம் நிரம்பினால், சுற்றுவட்டாரத்தில், 500 ஏக்கர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம், கால்நடை வளர்ப்பு என அனைத்துக்கும் உபயோகமாக இருக்கும். குளத்துக்கு மழை நீர் வரும் மேட்டுப்பாளையம் பாதையில் உள்ள சிறு பாலம் பராமரிப்பில்லாமல் உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், மழை நீர் செல்லும் பள்ளத்தை குப்பை, மண் இட்டு நிரப்பிவிட்டனர்; மழைநீர் செல்வதற்கு குழாய் அமைக்கவில்லை.சிறுமுகை சாலையில் இருந்து வரும் மழைநீரும் பல இடங்களில் குடியிருப்புகள், தொழிற்சாலைகளால் தடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பள்ளத்தை தூர்வார வேண்டும். குளத்தின் வடக்கே, குறிப்பாக பேரூராட்சி நிர்வாகத்தினர் கொட்டும் குப்பையால் குளமே குப்பை கிடங்காக மாறிவிட்டது. குப்பைக்கு அடிக்கடி தீ வைப்பதால், சிறுமுகை சாலை புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.இன்னும் சில மாதங்களில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இந்த குளத்திற்கு நீர் வர உள்ளது. குளத்தின் வடக்கே டன் கணக்கில் குப்பை குவிந்து கிடக்கிறது. தெற்கு பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது.
பன்றிகளும் குளத்தை அசுத்தப்படுத்துகின்றன. பொதுப்பணித்துறை குளத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர் வரும் பாதையை தூர்வாரி, கரைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் முழுமையாக கரை அமைத்து, குளத்தை ஆழப்படுத்துவதும் அவசியம். மரக்கன்றுகளும் நடவேண்டும். இதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE