பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே உள்ள வெள்ளக்கிணறு குட்டையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், வெள்ளக்கிணறு நீர் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் அளித்துள்ள மனு:துடியலுார், வெள்ளக்கிணறு ரோட்டில் உள்ள குட்டை, எங்களது அமைப்பு மற்றும் வெள்ளக்கிணறு ஊர் பொதுமக்கள் சார்பாக துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இக்குட்டையின் கரையை பலப்படுத்தி, 15 அடிக்கு அகலப்படுத்தியும், அதன்மீது நடைபாதை அமைத்தும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் குட்டையின் கரை சரி செய்யப்பட்டுள்ளது.ஆனால், பலப்படுத்தப்பட்ட கரையினில் நீர் வரும் மற்றும் வெளியேறும் பகுதியானது கரையை இணைக்கும் வகையில் இல்லை.
எனவே, அந்த இடங்களில் இணைப்பு பாலம் ஏற்படுத்தி கொடுத்தால், மக்கள் நடைபயிற்சி செய்து, பயன் பெறுவர். பலப்படுத்தப்பட்ட கரையை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து கொடுக்க வேண்டும். தண்ணீர் வரும் ராஜ வாய்க்காலில் உள்ள களை செடி மற்றும் புதர்களை அகற்ற வேண்டும்.வெள்ளக்கிணறு, துடியலுார் இடையே உள்ள ரயில் பாதையின் அடியில் உள்ள ராஜ வாய்க்கால் அகலம் குறைந்து காணப்படுகிறது. இப்பகுதியை அகலப்படுத்தினால், நீர்வரத்து தடையின்றி வரும். வெள்ளக்கிணறு குட்டைக்கு வரும் நீர், கணுவாய் தடுப்பணையில் இருந்துதான் வருகிறது. ஆனால், கணுவாய் தடுப்பணை பராமரிப்பின்றி உள்ளது. அதை சீரமைத்தால், அதை நம்பியுள்ள குளம், குட்டை, நீர் நிலைகள் அனைத்தும் பயன்பெறும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE