கோவை: கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை செயல் அலுவலராக (சி.இ.ஓ.,) பணிபுரிந்த, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ராஜ்குமார், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதியதாக பொது மேலாளர் பணியிடத்துக்கு பாஸ்கரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில், பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனம் போல், 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு,சேர்மன், நிர்வாக இயக்குனர், இயக்குனர்கள், தலைமை செயல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.சேர்மனாக, 'டுபிட்கோ' சேர்மன் சாய்குமார் இருக்கிறார். நிர்வாக இயக்குனராக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், இயக்குனராக துணை கமிஷனர் ஷர்மிளா இருக்கிறார். தலைமை செயல் அலுவலராக, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ராஜ்குமார் பணிபுரிந்து வந்தார்.இவர், 2020 நவ.,16ல் பணியில் இணைந்தார். அப்போது, ஓராண்டுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பணிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, சி.இ.ஓ., பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.இச்சூழலில், 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனத்துக்கு பொது மேலாளராக பாஸ்கரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், மாநகராட்சி திட்டங்களுக்கு ஆலோசகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அயல்பணி அதிகாரிகள் வெளியேற்றம் எப்போது?சென்னை மாநகராட்சியில், அயல் பணியாக பணிபுரிந்த வெளிமாவட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகளை, தமிழக அரசு கண்டறிந்து, அவர்களுக்கான 'ஒரிஜினல்' பணியிடத்துக்கு சமீபத்தில் திருப்பி அனுப்பியது.இதேபோல், கோவை மாநகராட்சி பொறியியல் பிரிவிலும் வெளியூரை சேர்ந்த பல அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களை பழைய பணிக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இவ்விஷயத்தில், தமிழக அரசே முடிவெடுக்க வேண்டும் என கூறி, மாநகராட்சி அதிகாரிகள் நழுவுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE