புதுடில்லி-இந்தியா குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளதாக, காமெடி நடிகர் வீர் தாசுக்கு எதிராக, டில்லி பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஆதித்ய ஜா, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர், வீர் தாஸ். சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியை அவர் நடத்தினார். அது தொடர்பான, 'வீடியோ'வை சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.'இரண்டு விதமான இந்தியாவில் இருந்து வருகிறேன்' என, தலைப்பிட்டுள்ள அந்த வீடியோவில், 'நான், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ள நாட்டில் இருந்து வருகிறேன்.ஆனால், 150 ஆண்டு பழைமையான கருத்துள்ள 75 வயதுகாரர் சொல்வதை கேட்க வேண்டியுள்ளது' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர் மற்றொரு, 'வீடியோ'வை வெளியிட்டார். அதில், 'காலையில் பெண்களை மதிக்கும், இரவில் பலாத்காரம் செய்யும் இந்தியாவில் இருந்து வருகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.அவருடைய இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஆதித்ய ஜா, போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:வெளிநாடுகளில் நம் நாட்டை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளதை மன்னிக்க முடியாது. வீர் தாசை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, 'தான் காமெடியாக கூறியதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என, வீர் தாஸ் பதிவிட்டுள்ளார். 'நாட்டை இழிவுபடுத்துவது என்னுடைய நோக்கமல்ல. எந்த நாட்டிலும் உள்ளதுபோல, நம் நாட்டில் இரு வேறு நபர்கள், சிந்தனைகள் உள்ளன.'இதில் ரகசியம் ஏதுமில்லை. நான் இந்தியாவை மதிக்கிறேன்' என, அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE