விடைபெற்றார் தலைமை நீதிபதி பிரிவு உபசாரத்தையும் தவிர்த்தார்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விடைபெற்றார் தலைமை நீதிபதி பிரிவு உபசாரத்தையும் தவிர்த்தார்

Added : நவ 18, 2021
Share
சென்னை:'உயர் நீதிமன்றத்தில் உள்ள பிரபுத்துவ கலாசாரத்தை முற்றிலுமாக உடைக்க முடியவில்லை' என, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2021 ஜன., 4ல் பொறுப்பேற்றார். பதவியேற்ற 10
 விடைபெற்றார் தலைமை நீதிபதி பிரிவு உபசாரத்தையும் தவிர்த்தார்

சென்னை:'உயர் நீதிமன்றத்தில் உள்ள பிரபுத்துவ கலாசாரத்தை முற்றிலுமாக உடைக்க முடியவில்லை' என, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2021 ஜன., 4ல் பொறுப்பேற்றார். பதவியேற்ற 10 மாதங்களில், மிக சிறிய மாநிலமான மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, வழக்கறிஞர்கள் முறையிட்டும், கொலீஜியம் ஏற்கவில்லை.

நேற்றைய பட்டியலில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன், வழக்குகள் பட்டியலிடப் பட்டிருந்தன. ஆனால், தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றம் வரவில்லை.பிரிவு உபசார நிகழ்ச்சியையும் தவிர்த்து விட்டார். காலை 9:00 மணி அளவில், காரிலேயே கோல்கட்டா புறப்பட்டு விட்டதாக தகவல் கசிந்தது.

சென்னை விமான நிலையம் சென்று, மனைவியை வழி அனுப்பிய பின், ஆந்திர மாநிலம் நெல்லுார் வழியாக, கோல்கட்டா புறப்பட்டார்.இதையடுத்து, மூத்த நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமர்வு, தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிடப் பட்டிருந்த வழக்குகளை விசாரித்தது.


உருக்கமான கடிதம்

சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவுத்துறை மற்றும் ஊழியர்களுக்காக, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 'உயர் நீதிமன்றத்தில் உள்ள என் பாசமிகு குடும்பத்தினருக்கு' என, கடிதத்தின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.சக நீதிபதி சகோதரர்களிடம் நேரில் விடைபெற்று செல்லாததற்கு மன்னிப்பு கோருகிறேன். என் நடவடிக்கையால் உங்களில் சிலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்; அதை தனிப்பட்டதாக கருத வேண்டாம். உயர் நீதிமன்றத்தின் தேவைக்காக, அந்த நடவடிக்கைகள் தேவைப்பட்டது.

நீங்கள் காட்டிய அன்பால், நானும், என் மனைவியும் மகிழ்ச்சி அடைந்தோம்.இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களில், தமிழக வழக்கறிஞர்கள் மிகச் சிறந்தவர்கள். சில நேரங்களில் என் அதிகப் படியான பேச்சு எரிச்சலை காட்டினாலும், நீங்கள் பொறுமையுடன், மரியாதையுடன் நடந்து கொண்டீர்கள். அதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன்.பதிவுத்துறையில் உள்ள வர்களின் திறமையால், எனக்கு நிர்வாகம் எளிதாக இருந்தது.
நல்ல முறையிலான அமைப்பை மேம்படுத்த, நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். வெளிப்படைத்தன்மை, பொறுப்பை வெளிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.எனக்காக, நீண்ட நேரம் செலவழித்த ஊழியர்களுக்காக வருந்துகிறேன். உங்களது முழு ஒத்துழைப்பை பாராட்டுகிறேன். நீங்கள் பணியாற்றும் இடத்தில் உள்ள பிரபுத்துவ கலாசாரத்தை முற்றிலும் உடைத்தெறிய என்னால் முடியவில்லை என வருந்துகிறேன்.
இந்த அழகான, புகழ் பெற்ற மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம். எங்கள் சொந்த மாநிலம் என, 11 மாதங்களாக அழைத்ததில் பெருமை கொள்கிறோம். மகிழ்ச்சிகரமான நினைவுகளுடன் இங்கிருந்து புறப்படுகிறோம்.இவ்வாறு, சஞ்ஜிப் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.


மூத்த நீதிபதிக்கு பொறுப்பு

அலஹாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 'அவர் பொறுப்பேற்கும் வரை, தலைமை நீதிபதியின் பணிகளை, மூத்த நீதிபதி எம்.துரைசாமி கவனிப்பார்' என, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X