சிம்லா: ''நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகள் பார்லிமென்டில், 25 - 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன,'' என. ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வேதனை தெரிவித்தார்.
அனைத்திந்திய சபாநாயகர்கள் நுாற்றாண்டு மாநாடு, ஹிமாச்சலப் பிரதேச சட்டசபையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பேசியதாவது: சட்டசபைகள் மிகவும் துடிப்புடன் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை. அதில் ஒன்று, சட்டங்கள் தானாகவே காலாவதியாகும் முறையை சேர்ப்பது.நம் நாட்டில் பல பழைய சட்டங்கள், தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லாத சட்டங்கள் தொடர்ந்து நீக்கப்படாமலேயே இருந்தன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின், 2014 - 2019 காலகட்டத்தில் மட்டும், 1,479 தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 500 சட்டங்களும், கர்நாடகாவில், 1,300 சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. சட்டங்களை உருவாக்கும்போதே அதற்கான ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குப் பின், அதன் தேவையில்லாதபோது, அது காலாவதியாகிவிடும்.

அதேபோல் நம் பார்லிமென்டில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இவ்வாறு, 25 - 30 ஆண்டு பழமையான வாக்குறுதிகளும் நிலுவையில் உள்ளன. இவை குறித்து பார்லி நிலைக் குழுக்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றன. நிறைவேற்ற முடியாத இதுபோன்ற வாக்குறுதிகள் குறித்து விவாதிப்பது நேரம் மற்றும் பண இழப்பையே ஏற்படுத்துகின்றன.
ராஜ்சபாவில் மட்டும் 842 வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலனவை 10 ஆண்டுக்கு மேற்பட்டவை. இதுபோலவே லோக்சபாவிலும் பல வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE