பெங்களுரு : வியாழன் கிரகத்தை விட மிகப் பெரிய நட்சத்திரக் கோளை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், ராஜஸ்தான் மாநிலம் அபு மலையில் உள்ள தொலைநோக்கி வாயிலாக புதிய நட்சத்திரக் கோளை கண்டு பிடித்துள்ளது. சூரியனை விட, 1.5 மடங்கு நிறை அதிகமாகவும், 725 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ள இந்த கோள், முதிர்ச்சி அடைந்த ஒரு நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றி வருகிறது. இதை பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான குழு, 'பரஸ்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2020 டிச., முதல், இந்தாண்டு மார்ச் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிய நட்சத்திரக் கோளின் நிறை 70 சதவீதமாகவும், வியாழன் கிரகத்தை விட, 1.4 மடங்கு பெரிதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நட்சத்திரக் கோள், எச்.டி., 82139 அல்லது டி.ஓ.ஐ., 1789 என தற்காலிகமாக அழைக்கப்படும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த கோள், அதன் நட்சத்திரத்திரத்திற்கு மிக நெருக்கமாக 3.2 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. குறுகிய துாரத்தில் சுற்றுவதால் கோளின் மேற்பரப்பில் கடும் வெப்பம் நிலவுகிறது.
அண்டத்தில் சூரிய மண்டலத்திற்கு வெளியே காணப்படும் தனித்துவமிக்க இத்தகைய நட்சத்திரக் கோள்களின் எண்ணிக்கை, 10க்கும் குறைவாகவே உள்ளது. இவை, 'வெப்ப வியாழக்கோள்கள்' என அழைக்கப்படுகின்றன. இவை, முதிர்ந்த நட்சத்திரங்களை சுற்றும் கோள்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE