அவசியம் மழைநீரை முழுமையாக சேமிக்க கட்டமைப்பு...அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவசியம் மழைநீரை முழுமையாக சேமிக்க கட்டமைப்பு...அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Added : நவ 18, 2021
Share
தியாகதுருகம் : கோமுகி மற்றும் மணிமுக்தா ஆற்றின் தடுப்பணையில் இருந்து மேலும் பல ஏரிகள் நீர் வரத்து பெறும் வகையில் கால்வாய் கட்டமைப்பை ஏற்படுத்தி தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் கோமுகி ஆற்றின் குறுக்கே கச்சிராயபாளையம் அருகே அணை கட்டப்பட்டுள்ளது.

தியாகதுருகம் : கோமுகி மற்றும் மணிமுக்தா ஆற்றின் தடுப்பணையில் இருந்து மேலும் பல ஏரிகள் நீர் வரத்து பெறும் வகையில் கால்வாய் கட்டமைப்பை ஏற்படுத்தி தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் கோமுகி ஆற்றின் குறுக்கே கச்சிராயபாளையம் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, சூளாங்குறிச்சி அருகே மணிமுக்தா ஆற்றில் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்விரு அணைகளும் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.இதன் மூலம் நேரடியாக 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. கோமுகி ஆற்றின் குறுக்கே தோப்பூர், சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, குரூர், விருகாவூர் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டப் பட்டுள்ளது.மணிமுக்தா ஆற்றின் குறுக்கே சூ.பாலப்பட்டு, வடபூண்டி, கொங்கராயபாளையம் ஆகிய ஊர்களில் தடுப்பணை உள்ளது.மழைக்காலங்களில் அணைகள் திறக்கப்பட்டு தடுப்பணைகள் நிரம்பி வழியும் போது இங்கிருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து கிடைக்கும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்கப்படாமல் புதர் மண்டி துார்ந்துள்ளது.இதனால், தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும்

தண்ணீர் வாய்க்கால் வழியாக ஏரிகளுக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே விரயமாகி விடுகிறது. கன மழை பெய்யும் ஆண்டுகளில் மட்டும் ஏரிகள் நிரம்புவதால் தண்ணீர் பிரச்னை ஏற்படுவதில்லை.பருவமழை பொய்க்கும் காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு மழைநீரை வீணாக்காமல் முழுமையாக ஏரிகளில் சேமித்து வைக்க வழி இருந்தும் நீர் வழிப்பாதையை முறையாக பராமரிக்காததால் பயனின்றி கிடக்கிறது.தற்போது மாவட்டத்தில் கனமழை பெய்து பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அப்படி இருந்தும் இன்னும் பல ஏரிகள் நீர் வரத்தின்றி நிரம்பாமல் உள்ளது. மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமித்தால் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு ஆறுகளில் உள்ள தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை வாய்க்கால் மூலம் மேலும் பல ஏரிகளை இணைக்க முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக வேலு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுப்பணித் துறையை கவனிப்பதால் மாவட்டத்தில் நீர்வழி கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் திட்டம் தயாரித்து அதனை அமைச்சரின் பார்வைக்கு எடுத்துச்சென்று திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செயல்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் நீர் வளம் அதிகரித்து விவசாயம் பன்மடங்கு பெருக வாய்ப்பு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X