
ஒரு சேர சென்னை மற்றும் காவல் துறையின் பெருமையை தோளில் துாக்கி நிறுத்திய டி.பி.சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டு இருக்கிறது.
நேற்று மாலை கூட இளைஞர்கள் பலர் இசை வாத்தியங்களுடன் வந்து அவரை வாழ்த்தி பாட்டுப் பாடி மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
நல்லது செய்தால் பாராட்ட ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் இது, நான் இளைய தலைமுறைக்கு உந்து சக்தியாக மாறியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

முதல்வர் வரை பாராட்டு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்து இல்லை மழையில் மயங்கிக் கிடந்த மனிதனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் அன்று ஓடிக்கொண்டு இருந்தது அதற்காகத்தான் யாராவது துாக்குவார்கள் என்று எதிர்பார்க்காமல் நானே தோளில் துாக்கிக்கொண்டு ஓடினேன்.
நான் மட்டுமல்ல மனிதநேயம் கொண்ட காவல்துறையினர் யாராக இருந்தாலும் அன்று அதைச் செய்துதான் இருப்பர் ஆகவே எனக்கு கிடைக்கும் பாராட்டை வாழ்த்தை நான்,நான் சார்ந்துள்ள காவல்துறைக்கே சமர்ப்பிக்கிறேன்.
முதல்வரின் வாழ்த்து செய்தியை படிக்கும் போது இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு இது போன்ற துணிகரமான செயல் ஒன்றும் புதிதல்ல என்பது புரிந்தது அவரே கும்பகோணம் மகாமகம் உள்ளீட்ட சம்பவங்களை கோடிட்டு காட்டியிருந்தார்.
அது ஒரு மறக்கமுடியாத சம்பவம் எதிர்பாராமல் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டு ஒடினர் மிதிபட்டவர்கள் உடனடி சிகிச்சை பெற்றால் மட்டுமே பிழைக்கமுடியும் என்ற நிலை, களத்தில் இறங்கி எவ்வளவு பேரை துாக்கிக் கொண்டு போய் காப்பாற்ற முடியுமோ அவ்வளவு பேர்களை துாக்கிக் கொண்டு சென்று அன்று காப்பாற்றினேன்

இறந்து போன என் தந்தை எட்வர்ட் காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்து ஒய்வு பெற்றவர் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது எல்லாம் நேர்மை உண்மை உழைப்பு மட்டுமே. நீ சம்பாதிக்க வேண்டியது எல்லாம் மக்களின் நன்மதிப்பைத்தான் என்று சொல்லி சொல்லி வளர்த்தார்.கூடவே அசாத்திய துணிச்சலையும் கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றார்.
இதன் காரணமாக எத்தனை ரவுடிகள் இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பேன் கஞ்சா விற்ற ஒரு ரவுடி அரிவாளால் வெட்டினான் அந்த காயத்துடன் ரத்தம் கொட்டக்கொட்ட அவனை மடக்கிப்பிடித்தேன்,இது போன்ற சம்பவங்கள் காரணமாக என் கைகளில் உடம்பில் வெட்டுக்காயங்களும் அது தந்த தழும்புகளும் நிறையவே உள்ளன.இந்த தழும்புகள்தான் என் ஆபரணங்கள்,இதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பெருமையாக இருக்கும்.
துப்பாக்கி சுடும் போட்டியில் பெற்றது,நெருப்பு வளயைத்தில் மோட்டார் பைக்கில் பாய்ந்து சாகசம் செய்ததற்கு கொடுத்தது,பல்வேறு தடகள போட்டிகளில் ஜெயித்து வாங்கியது என்று அவரது வீடு முழுவதும் மெடல்களும் அதற்கு சான்றான புகைப்படங்களும் காணப்படுகின்றன.
போலீஸ்னா இருபத்து நான்கு மணிநேரமும் ‛பிட்டாக' இருக்கவேண்டும் என்று சொல்லும் ராஜேஸ்வரி அதற்கேற்ப நாள் தவறாமல் உடற்பயிற்சி ஓட்டப்பயிற்சி செய்பவர்.
இதை எல்லாம் தாண்டி வெளியே தெரியாமல் பல ஏழைக்குழந்தைகள் படிப்பிற்கு செலவிடுவதும்,திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு உதவுவதும் அவரை ஏழை எளியவர்களின் ‛காவலர்' என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE