இதெல்லாம் ஏமாற்று வித்தை!
எல்.சுரேஷ், பணகுடி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு புரியாது...' என்ற கவிஞர் வாலியின் வரிகள், தமிழக அரசுக்கு சாலப் பொருத்தம்.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டும் வேறு கட்சிகள் என்றாலும், அவற்றிற்கு இடையே பல ஒற்றுமைகளும் உண்டு.அதைத் தான், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், 'இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று வர்ணித்திருந்தார்.ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது, ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சி நிர்வாகிகளுக்கும் 'கமிஷன்' வழங்கப்படும். இரு கட்சியினரும் வெளியே தான் எதிரி போல தெரிவர்; ஆனால், கொள்ளையடிப்பதில் இருவரும் பங்காளிகள்!சென்னையின் வெள்ளப் பாதிப்புக்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். கேட்பதற்கே வேடிக்கையாக இல்லை?அதிகாரிகளின் பட்டியலும், ஒப்பந்ததாரர்களின் விபரமும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் உள்ளது.
வெள்ளப் பாதிப்புக்கு காரணமான அரசு அதிகாரிகளை, 'டிஸ்மிஸ்' செய்து, ஒப்பந்ததாரரிடம் தொகையை திரும்ப பெற்றால், அது சரியான நடவடிக்கை.இவர்கள், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதும், ஒப்பந்ததாரரின் பெயரை 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்ப்பதும் ஏதாவது பலன் தருமா?ஒப்பந்ததாரர் பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்தால், தன் வாரிசு பெயரில் ஒப்பந்தம் பெறுவார். வேறொரு இடத்திற்கும் செல்லும் அதிகாரியும் 'ஜாலி'யாக தான் இருப்பார். திருடப்பட்ட மக்களின்
வரிப்பணம் திரும்ப வராது!இக்கடிதத்தின் துவக்கத்தில், வாலி எழுதிய வரியை குறிப்பிட்டேன் அல்லவா? அதற்கான விளக்கம் இதோ...மழை வெள்ளத்துக்கு காரணமான அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை நிச்சயம் எனக் கூறினர் அல்லவா?
இப்போது, 'பிளேட்'டை அப்படியே திருப்பி போட்டு, 'மழைக்காலம் முடிந்ததும், மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க, தனி ஆணையம் அமைக்கப்படுவது உறுதி' என, தமிழக அரசு அறிவித்திருக்கிறது.இதுவரை அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து, யாராவது தண்டனை பெற்று உள்ளனரா?
விசாரணை ஆணையம் என்பது, மக்களை ஏமாற்றும் வித்தை அவ்வளவு தான்; புரிந்துக் கொள்ளுங்கள் பொது மக்களே!
தொடரும் துரோக சரித்திரம்!
கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து, நம் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.அடுத்த நாளே, மரங்களை வெட்ட அனுமதி அளிக்க முடியாது என்று கேரளா அரசு அறிவித்தது.கேரள மார்க்சிஸ்ட் அரசின் இந்த அடாவடித்தனத்தை கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.இது, சாதாரண மரம் வெட்டும் பிரச்னை அல்ல; மரங்களை வெட்டினால் தான், பேபி அணையில் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள முடியும்.ஸ்டாலினுக்கு ஒரு கனவு இருக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலின் போது அதிக இடங்களில் வெற்றி பெற்று, தேசிய அளவில் உயர் பதவியில் அமர வேண்டும் என்பது தான் அது.அவரது கனவுக்கு, கம்யூனிஸ்ட்கள் உதவி செய்வர் என்பது அவரது எண்ணம். அதனால் தான் தமிழக நலன்களை விட்டுக் கொடுத்து கம்யூனிஸ்ட்களை, 'தாஜா' செய்கிறார்.
ஸ்டாலினின் கனவு, நனவாக போவதில்லை. தன் வீண் கனவுக்காக, தமிழக விவசாயிகளின் நலன்களை அடகு வைக்க நினைப்பது துரோகமாகும்.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்தன.ஆனால் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த அணையை இடிக்க கேரளா அரசு திட்டமிடுகிறது. ஏனெனில் தம் சுயநலத்திற்காக, தமிழகத்தின் நலனை அடகு வைக்க தி.மு.க., தயாராக இருக்கும் என்பது,
அனைவருக்கும் தெரியும்.அணையிலிருந்து நீர் திறந்துவிடும் உரிமை, தமிழக அரசிடம் தான் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு, கேரள அமைச்சர்களே அணையின் நீர்மட்டம் 137 அடியை நெருங்குவதற்குள், அணையின் மதகுகளை திறந்துவிட்டுள்ளனர். தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்தது.நடிகரைப் போல, 'மேக்கப்' போட்டு, கேமராக்கள் புடை சூழ, 'போட்டோ சூட்' நடத்தி விளம்பரம் தேடுவதையே, முழு நேர பணியாக முதல்வர்
ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.கருணாநிதி முதல்வராக இருந்த போது, நம் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தார், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் இருந்தார். பதவி மோகத்தில், தமிழகத்தை அடகு வைத்தார்.கருணாநிதியின் வழியைத் தான் அவரது மகனும், முதல்வருமான ஸ்டாலின் பின்பற்றுகிறார். அதே துரோக சரித்திரம் மீண்டும் தொடர்கிறது!
எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர்?
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா சூழல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதி இரண்டு தவணைகளில் வழங்கப்படும். 2021 - -2022 நிதி ஆண்டில் ஒரே தவணையாக 2 கோடி ரூபாயை வழங்க உள்ளது.தற்போதைய சூழலில் அனைத்து வகையான நீர் நிலையை துார் வார, புதிய தடுப்பணைகள் கட்ட, மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்க, எம்.பி.,க்கள் தங்கள் நிதியை ஒதுக்க முன்னுரிமை தர வேண்டும்.தமிழகம் முழுதும் உள்ள உள்ளாட்சித் துறை நிர்வாக அமைப்புகளுக்கு, மழையால் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.
இதை விடுத்து, வழக்கம் போல பஸ் நிற்காத இடத்தில் பேருந்து நிழற்குடை போன்ற மக்களுக்கு பயனில்லாத திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி, 'கமிஷன்' அடிக்க நினைப்பரோ என தெரியவில்லை.என்ன செய்யப் போகின்றனர் எம்.பி.,க்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE