சென்னை உஷ்ஷ்ஷ்! | Dinamalar

சென்னை 'உஷ்ஷ்ஷ்!'

Added : நவ 18, 2021
சட்டசபை அரங்கில் பிரியாணி விருந்து?சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் சட்டசபை வளாகத்தில், நெருக்கமான இருக்கைகள் இருப்பதால், கொரோனா காலத்தில் அதை பயன்படுத்துவதை தவிர்த்தனர். கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தினர். தலைமை செயலகத்தில் இருக்கும் அரங்கிற்கு சமீப காலமாக யாருமே செல்லாமல் இருக்கின்றனர். சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நாட்களில், அந்த அரங்கு

சட்டசபை அரங்கில் பிரியாணி விருந்து?

சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் சட்டசபை வளாகத்தில், நெருக்கமான இருக்கைகள் இருப்பதால், கொரோனா காலத்தில் அதை பயன்படுத்துவதை தவிர்த்தனர். கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தினர். தலைமை செயலகத்தில் இருக்கும் அரங்கிற்கு சமீப காலமாக யாருமே செல்லாமல் இருக்கின்றனர். சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நாட்களில், அந்த அரங்கு பராமரிப்பு பணிகள் தவிர, மற்ற நேரங்களில் பூட்டி வைத்தே பாதுகாக்கப்படும்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., பிரமுகர்கள் பலர், சுற்றுலாவுக்காக சென்னை வந்தனர். அண்ணா அறிவாலயம், மெரினாவில் இருக்கும் கருணாநிதி நினைவிடம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தவர்கள், அப்படியே கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கையும் பார்த்து வரச் சென்றனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சபாநாயகர் அப்பாவுவை அணுகி அனுமதி கேட்டனர். சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து சட்டசபை செயலருக்கு தகவல் சொல்லப்பட, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்றவர்கள், கூட்ட அரங்கில் அமர்ந்து போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களிலும் பதிவிட, அது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் வந்து அமர்ந்து விவாதித்து செல்லக் கூடிய பகுதிக்குள் எந்த கட்டுப்பாடும், பாதுகாப்பும் இல்லாமல், ஆளுங்கட்சிக்காரர்கள் சென்றது எப்படி என, எதிர்க்கட்சி தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர். கூட்ட அரங்கை பார்வையிடச் சென்றவர்கள், உள்ளே பிரியாணி எடுத்துச் சென்று சாப்பிட்டதாகவும் தெரிகிறது.

ஜாம்பவான்களை பழி வாங்கினாரா?

தி.மு.க.,வில் ஜாம்பவான்களாக திகழ்ந்த நால்வரை பழி வாங்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்து உள்ளார், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ. எப்படி? சமீபத்தில் தென் மாவட்ட தொழிலதிபர் ஒருவரை வைகோ சந்தித்துள்ளார். அந்த தொழிலதிபர், வைகோவிடம், 'உங்களுக்கும், சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜாவுக்கும் என்ன பிரச்னை' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.உடனே உணர்ச்சிவசப்பட்ட வைகோ கூறியதாவது: கலிங்கப்பட்டிக்கு அரசு மருத்துவமனை கொண்டு வர விரும்புகிறேன். என் கோரிக்கையை கருணாநிதியாக இருந்தால் நிறைவேற்றி வைத்திருப்பார். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, மீண்டும் தி.மு.க.,வுக்கு ஓடிப்போன மதுராந்தகம் ஆறுமுகம், பொன்.முத்துராமலிங்கம், வேதாரண்யம் மீனாட்சிசுந்தரம், கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு எல்லாம் அந்த கட்சி சார்புல எம்.பி., பதவி வழங்கக் கூடாதுன்னு கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் எனக்கு மதிப்பளித்து, எந்த பதவியும் வழங்கவில்லை.
தற்போது அறிவாலயத்துல இருக்கிற தி.மு.க., மாநில நிர்வாகியிடம், அரசு மருத்துவமனை பிரச்னையை கொண்டு சென்றதற்கு, அவரோ, 'கட்சித் தலைமையிடம் நீங்கள் சொல்ல வேண்டியது தானே; அதை விட்டுட்டு ராஜா எம்.எல்.ஏ.,விடம் எதற்கு பேசுறீங்க'ன்னு என்னிடம் கேள்வி கேட்கிறாங்க. இப்படியா ஒரு கூட்டணி கட்சித் தலைவரிடம் பேசுவது?இப்படி வைகோ வருத்தப்பட்டதாக தகவல்.

வாரிசுகள் மையமான ரியல் எஸ்டேட் ஆணையம்!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அலுவலகம், சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ., வளாகத்தில் செயல்படுகிறது.ஓய்வு பெற்ற தலைமை செயலர் ஞானதேசிகன் தலைமையில், அரசு நியமித்த உறுப்பினர்கள், இந்த ஆணையத்தை நடத்தி வருகின்றனர். ஆணையம் ஏற்படுத்தப்பட்ட போது, நிர்வாக பணிகளுக்காக, சி.எம்.டி.ஏ.,வில் ஓய்வு பெற்ற சில அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் புதிய பணியாளர்கள், அலுவலர்களை நியமிக்க விதிகள் வகுக்கப்பட்டன. ஆனாலும், ஓய்வு பெற்று இங்கு அடைக்கலம் புகுந்த அதிகாரிகள், புதிதாக யாரையும் நியமிக்காமல், தங்கள் வாரிசுகளை தற்காலிக அடிப்படையில் நியமித்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இப்படி வந்த வாரிசுகளால், ஆணையம் நிரம்பி வழிவதாகவும், தகுதியான புதிய திட்டங்களை பதிவு செய்ய கூட, இவர்கள் பேரம் பேசுவதாகவும் புகார் கூறுகின்றனர். 'வாரிசுகளிடம் இருந்து ரியல் எஸ்டேட் ஆணையத்தை, அரசு தான் மீட்க வேண்டும் என்கின்றனர்' உயர் அதிகாரிகள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X