திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிக்கிக் கொணடதால், கயிறு கட்டி அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், கொரட்டி அருகே பம்பாற்று ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து தான், தண்டுகானுார் கிராமத்திற்கு மக்கள் சென்று வந்தனர். நேற்று இரவு கனமழை பெய்தது.இதில் இன்று அதிகாலை 3:00 மணிக்கு இந்த தரைப்பாலம் மூழ்கியது. ஆனால் திருப்பத்துார் மாவட்டத்திற்கு 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதனால் தண்டுகானுாரை சேர்ந்த 10, பிளஸ் 2 மாணவர்கள் 12 பேர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால், தரைப்பாலத்தின் மீது நடந்து சென்றனர்.அப்போது, சில மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி தரைப்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் தரைப்பாலத்தின் ஒரு பகுதிக்கு லாரியை எடுத்து வந்து நிறுத்தி தாம்பு கயிற்றை கட்டி மறுபக்கம் மறு கரையில் இருந்த டெலிபோன் கம்பத்தில் சேர்த்து கட்டினர்.
பின் மாணவர்கள் கயிற்றை பிடித்து தரைப்பாலத்தை கடந்து வந்தனர். கொரட்டி, திருப்பத்துார் செல்ல வேறு பாதை இல்லாததால், தரைப்பாலத்தை உயர்த்தி கட்டித் தரும்படி அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE