'ஆடைக்கு மேல் தொடுவதும் பாலியல் குற்றமே'

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:'போக்சோ' சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை பெண் நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'உடலோடு உடல் தொடர்பு இருப்பது முக்கியமல்ல. காம இச்சையுடன் செயல்படுவதே பாலியல் வன்முறைக்கு முக்கிய அம்சம்' என, உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது. குற்றச்சாட்டு மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ்
 'ஆடைக்கு மேல் தொடுவதும் பாலியல் குற்றமே'

புதுடில்லி:'போக்சோ' சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை பெண் நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'உடலோடு உடல் தொடர்பு இருப்பது முக்கியமல்ல. காம இச்சையுடன் செயல்படுவதே பாலியல் வன்முறைக்கு முக்கிய அம்சம்' என, உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது.


குற்றச்சாட்டு


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள நாக்பூரைச் சேர்ந்த 39 வயது நபர், 2016ல் தன் வீட்டருகே உள்ள 12 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். அச்சிறுமியின் மார்பகத்தை தொட்டதாக புகார் கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் அந்த நபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, போக்சோ சட்ட குற்றச்சாட்டில் இருந்து, அந்த நபரை விடுவித்து தீர்ப்பளித்தார்.
இந்தாண்டு, ஜனவரி 19ல் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:போக்சோ சட்டத்தின்படி உடலோடு உடல் தொடர்பு இருந்தால் தான், அது பாலியல் வன்முறை. ஆனால், இந்த நபர் அச்சிறுமியின் உடையை அகற்றாமல் மார்பகத்தை தொட்டுஉள்ளார். அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில், பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாக, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. போக்சோ சட்டம்இத்தீர்ப்பு, நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போக்சோ சட்டம் குறித்த கேள்வியையும் எழுப்பியது.

இந்நிலையில், அத்தீர்பை செயல்படுத்துவதற்கு, ஜனவரி 19ல் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.இந்த வழக்கை, நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட், பேலா திரிவேதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:நல்ல நோக்கத்துடன், மிகவும் தெளிவாக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால், அதில் சர்ச்சைகளை நீதிமன்றங்கள் உருவாக்கக் கூடாது. குற்றவாளிக்கு சாதகமாக சட்டத்தை வளைத்து பார்க்க முயற்சிக்கக் கூடாது.உடலோடு உடல் நேரடித் தொடர்பு இருந்தால் மட்டுமே பாலியல் வன்முறை என பார்க்கக் கூடாது. அதில் ஈடுபடுவரின் நோக்கத்தை கவனிக்க வேண்டும்.


தள்ளுபடி

காம இச்சையுடன், மர்ம உறுப்புகளை தொடுவது அல்லது வேறு எந்த வகையிலாவது உடலோடு தொடர்பு கொள்வது ஆகியவற்றையும் பாலியல் வன்முறையாகவே பார்க்க வேண்டும்.அதனால், இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை அளித்துள்ள தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


பெண்கள் ஆணையம் வரவேற்பு


மும்பை, உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்பை எதிர்த்து, தேசிய பெண்கள் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.'குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, ஆணையம் சார்பில் வலியுறுத்தப் பட்டது.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். இதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சட்டப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது' என, தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X