கிணத்துக்கடவு: பருத்தி விலை குவிண்டால், 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளதால், கிணத்துக்கடவு பகுதியில், நடப்பு ஆண்டில், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியம், கல்லாபுரம், வடபுதுார், சொக்கனுார், சிங்கையன்புதுார் மற்றும் சட்டக்கல்புதுார், கண்ணமநாயக்கனுார், மீனாட்சிபுரம், பெரும்பதி பகுதிகளில், பருத்தி சாகுபடி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், பருத்தி விலை குவிண்டாலுக்கு, 5,000 ரூபாய்க்கு விற்ற நிலையில், 75 ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டில் பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்கும் என, வேளாண் சந்தை நிலவரங்களால் அறிந்த விவசாயிகள், சாகுபடி பரப்பை அதிகரித்துள்ளனர்.குறிப்பாக, பருத்தி ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்திய, ஆர்.சி.எச்.பி., - 625 ரகம், எம்.ஆர்.சி - 6918 ரகம், மற்றும் ஆங்கூர் - 2110 ரக பருத்தி விதையை நடவு செய்துள்ளனர்.விவசாயி தன்ராஜ் கூறியதாவது:மானாவாரியிலும் கூடுதல் மகசூல் கொடுப்பது பருத்தி மட்டுமே. கடந்த ஆண்டு வரை, குவிண்டாலுக்கு, 5,000 - 5,500 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது குவிண்டாலுக்கு, 8,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், நடப்பு பருவத்தில், கூடுதல் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏக்கருக்கு, 600 - 700 கிராம் பருத்தி விதை தேவைப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களிலும், கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்திலும் விதைகளை பெற்று நடவு செய்யப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில், 120 ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர் மழையால், பருத்தி செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. நோய், பூச்சி தாக்குதல் இல்லை. இந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE