ஊட்டி: நீலகிரியில்,பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 15 ஆயிரம் ஏக்கர் மலை காய்கறி தோட்டங்களை பாதுகாக்க தோட்டக்கலை நடவடிக்கை எடுத்துள்ளது.நீலகிரியில், உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.'பருவ மழை எதிரொலியாக, நீலகிரிக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது,' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மாவட்டத்தில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், 30 பகுதிகள் நிலச்சரிவு, மணிசரிவு அதிகளவில் ஏற்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக, 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட மலை காய்கறிகள் தோட்டங்களை பருவ மழையின் போது பாதுகாத்து கொள்ள தோட்டக்கலை துறை சில வழி முறைகளை வகுத்துள்ளது.நீலகிரி தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறுகையில், ''பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக மலை காய்கறி தோட்டங்களில் நீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்; பசுமை குடிலின் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் கம்பிகளால் இணைக்க நடவடிக்கை வேண்டும். நீர் பாசனம், உரமிடுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த புதியதாக நடவு செய்த செடிகளுக்கு குச்சிகளால் முட்டு கொடுத்து பாதுகாக்க வேண்டும். தகவல் ஏதும் தேவைப்பட்டால் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE