பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மந்தம்: நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்?

Updated : நவ 20, 2021 | Added : நவ 18, 2021
Share
Advertisement
தமிழகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான 624 பணிகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தும், மாநில அரசின் நிதிப்பங்களிப்பு இல்லாததால் 40 சதவீதப்பணிகள் கூட முழுமையாக முடிவடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.கடந்த 2014ல் பா.ஜ.,தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும், இந்தியாவில் 100 'ஸ்மார்ட் சிட்டி' உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி
தமிழகம், ஸ்மார்ட்சிட்டி, பணிகள், மந்தம்,  நிதி ஒதுக்கீடு, பாரபட்சம்,

தமிழகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான 624 பணிகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தும், மாநில அரசின் நிதிப்பங்களிப்பு இல்லாததால் 40 சதவீதப்பணிகள் கூட முழுமையாக முடிவடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2014ல் பா.ஜ.,தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும், இந்தியாவில் 100 'ஸ்மார்ட் சிட்டி' உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.முதற்கட்டமாக, 2016 ஜன., 28 அன்று, 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதில், தமிழகத்தில் சென்னையும் கோவையும் இடம் பெற்றிருந்தன.

கடந்த ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. தற்போது சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருச்சி, திருெநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலுாரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், ரூ.17 ஆயிரத்து 509 கோடி மதிப்பில், 624 பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதில், திருப்பூர் மாநகராட்சிக்கு, அதிகபட்சமாக 2,879 கோடி ரூபாய் மதிப்பில், 26 பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் தரப்பட்டது. சென்னைக்கு, குறைந்தபட்சமாக 45 பணிகளுக்கு 959 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்பூருக்கு அடுத்து வேலுார் மாநகராட்சிக்கு ரூ.2,093 கோடி மதிப்பில் 36 பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 90 பணிகளுக்கு ரூ.2,073 கோடி, மதுரையில் 14 பணிகளுக்கு ரூ.1,892 கோடி, திருநெல்வேலியில் 66 பணிகளுக்கு ரூ.1,666 கோடி, திருச்சியில் 74 பணிகளுக்கு ரூ.1,510 கோடி, ஈரோட்டில் 43 பணிகளுக்கு ரூ.1,312 கோடி, கோவையில் 73 பணிகளுக்கு ரூ.1,311 கோடி, துாத்துக்குடியில் 67 பணிகளுக்கு ரூ.1048 கோடி, தஞ்சாவூரில் 90 பணிகளுக்கு ரூ.1,012 கோடி மதிப்பில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில், தலா 50 சதவீதத் தொகையை மத்திய அரசும், மாநில அரசும் வழங்குகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், முதலில் துவங்கிய சென்னை, கோவையில் கூட பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.

சேலத்தில்தான் அதிகபட்சமாக, ரூ.2,074 கோடிக்கு ஒப்புதல் பெற்ற 90 பணிகளில் ரூ.1,337 கோடி மதிப்பிலான 55 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.மதுரையில் ரூ.1,892 கோடியில் 14 பணிகளுக்கு ஒப்புதல் பெற்றும், ரூ.42 கோடி மதிப்பிலான இரண்டு பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. துாத்துக்குடியிலும் ரூ.14 கோடி மதிப்பிலான 16 பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் நிலை குறித்து, கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.,க்களுக்கு, கடந்த ஆக.11 வரையிலான நிலவரப்படி மத்திய அரசு கொடுத்துள்ள தகவல் அட்டவணையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக, ரூ.17 ஆயிரத்து 5௦௯ கோடி மதிப்பிலான 624 பணிகளில், இதுவரை 4,143 கோடி ரூபாய் மதிப்பிலான 239 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.13 ஆயிரத்து 114 கோடி மதிப்பிலான 372 பணிகளுக்கு 'ஒர்க் ஆர்டர்' தரும் நிலை உள்ளது. ரூ.333 கோடி மதிப்பிலான 13 பணிகளுக்கு டெண்டர் விடும் நிலை உள்ளது. அதாவது 40 சதவீதப் பணிகள் கூட முடியாமல், படுமந்தமாக பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில், கடந்த நான்காண்டுகளாக இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருவதற்கு, மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. சென்னை, சேலம், திருப்பூர், கோவையைத் தவிர்த்து, மற்ற மாநகராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கு, மாநில அரசின் 50 சதவீத நிதிப்பங்களிப்பு வழங்கப்படாததால்தான், பல பணிகள் கிடப்பில் கிடப்பதாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இனியாவது இந்த பாரபட்சமின்றி, நிதியை ஒதுக்கி திட்டத்தை வேகப்படுத்த வேண்டியது புதிய அரசின் கடமை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X