2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு: தமிழகத்தை பாடாய் படுத்தும் ரூல் கர்வ் நடைமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு: தமிழகத்தை பாடாய் படுத்தும் 'ரூல் கர்வ்' நடைமுறை

Added : நவ 19, 2021
Share
கூடலுார்:விதி வளைவு எனும், 'ரூல் கர்வ்' நடைமுறையால், முல்லை பெரியாறு அணையில் ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 142 அடிக்கு நீர் தேக்கலாம். அணை நிலவரம்அணை நீர்ப்பிடிப்பு பகுதியில்
 2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு: தமிழகத்தை பாடாய் படுத்தும் 'ரூல் கர்வ்' நடைமுறை

கூடலுார்:விதி வளைவு எனும், 'ரூல் கர்வ்' நடைமுறையால், முல்லை பெரியாறு அணையில் ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 142 அடிக்கு நீர் தேக்கலாம்.


அணை நிலவரம்


அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்பு இருந்தும், அணையின் நீர்மட்ட கால அட்டவணை எனும் 'ரூல் கர்வ்' நடைமுறையால் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அக்டோபர் 29ல் நீர்மட்டம் 138.85 அடியாக இருந்தபோது, கேரள பகுதிக்கு அணையை ஒட்டியுள்ள எட்டு ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக 3,870 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் மழை சற்று குறைந்ததால் நவம்பர் 6ல் ஷட்டர்கள் அடைக்கப்பட்டு, நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் துவங்கிய கன மழையால் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது.காலை 8:00 மணிக்கு மூன்று மற்றும் நான்காவது ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 772 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.அதன்பின் காலை 10:00 மணிக்கு இரண்டு, ஐந்து என மேலும் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, மொத்தமுள்ள நான்கு ஷட்டர்கள் மூலம் 1,544 கன அடி நீர் கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.
தமிழக பகுதிக்கு 2,300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று பகலில் நீர்ப்பிடிப்பில் மழை குறைந்ததால் நீர்வரத்து மாலை 3:00 மணி நிலவரப்படி 94 கன அடியாக குறைந்தது. இதனால் காலையில் 141 அடியாக இருந்த நீர்மட்டம் குறைந்து, 140.95 அடியானது. அணையில், தமிழக நீர்வளத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது போல, கேரள நீர்வளத் துறையின் பொறியாளர் குழுவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணை நிலவரம் குறித்து, இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும், கேரள அரசுக்கும் தெரியப்படுத்தி வருகின்றனர்.


2ம் கட்ட எச்சரிக்கை

அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதும், கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேறும் வல்லக்கடவு, வண்டி பெரியாறு, உப்புதுரை, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டது. அடுத்து 142 அடியாக உயரும்போது மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்படும்.


வைகை

தேனி மாவட்டம் வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. நேற்று முன்தினம் இரவில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,248 கன அடியாக உயர்ந்தது.
இதனால், மேல்மதகு வழியாக அணைக்கு வந்த உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை அணை நீர் மட்டம் 69.42 அடி, நீர் வரத்து வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. அது அப்படியே வெளியேற்றப்பட்டது. வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


பவானி சாகர்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணை, 105 அடி உயரம் கொண்டது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் நீர்வரத்து அதிகரித்து, நேற்று 104.22 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.
எந்நேரத்திலும் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், அணை பாதுகாப்பு கருதி, நேற்று காலை முதல் அணைக்கு வரும் தண்ணீர், அப்படியே பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, 11 ஆயிரத்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி, தண்டோரா வாயிலாக, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


நிரம்பியது ஆழியாறு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. மொத்த உயரம் 120 அடி. தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 31ல் அணை முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீர் வீணாகாமல் இருக்க, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, தொடர் மழையால் 119.80 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, 11 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X