திருநெல்வேலி : நெல்லை மான்பூங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து இறைதேடி ரோட்டிற்கு வரும் மான்கள் வாகனங்கள் மோதியும், நாய்கள் கடித்து குதறியும் இறப்பதும் அதிகரித்துள்ளது. மான்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நெல்லை கங்கைகொண்டான் மான்பூங்கா, தாழையூத்து, அபிஷேகப்பட்டி கால்நடைப்பண்ணை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகம், சீதபற்பநல்லூர், ராமையன்பட்டி, கயத்தாறு பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளது. தாழையூத்து பகுதியில் கடா எனப்படும் மிளா வகை மான் உள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் வனப்பகுதியிலும் மான்கள் பராமரிக்கப்படுகின்றன.மான்களை பாதுகாக்க மான் பூங்காவை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மான்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் துவக்கப்பகுதியான கயத்தாறு வரை காட்டிலேயே சுற்றித்திரிகின்றன. மான்களின் இனப்பெருக்கத்தால் ஆயிரத்திற்கும் அதிகமான மான்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.மழைக்காலங்களில் இறைதேடி மான்கள் ரோட்டிற்கு வருவதில்லை.
ஆனால் கோடை காலம் ஏற்பட்டால் மான்கள் இறைதேடியும், தண்ணீருக்காகவும் ரோட்டிற்கு வந்துவிடுகின்றன. இவ்வாறு ரோட்டிற்கு வரும் மான்கள் ரோட்டை கடக்க முற்படும் போது வாகனங்கள் மோதி இறந்துவிடுகின்றன.வேட்டை நாய்களை கூட்டமாக அழைத்துச் சென்று வேட்டைக்காரர்கள் காட்டிற்குள் முயல் வேட்டைக்கு செல்கின்றனர். அப்போது மான்களையும், நாய்கள் மூலம் விரட்டச் செய்கின்றனர். இவ்வாறு விரட்டப்படும் மான்கள் வேலியை தாண்டி ரோட்டிற்கு வரும் போது வாகனங்கள் மோதி இறந்துவிடுகின்றன. சில சமயங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பாய்ந்து மான்களை கடித்து குதறுகின்றன. இவ்வாறு இறக்கும் மான்களை வேட்டைக்காரர்கள் தூக்கிச் சென்று கறிவைத்து சாப்பிடுகின்றனர்.காடுகளில் வேலிகள் இல்லாத ராமையன்பட்டி, கயத்தாறு, தாழையூத்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகம், அபிஷேகப்பட்டி கால்நடைப்பண்ணை வனப்பகுதிக்குள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கூட்டம் அவ்வப்போது காட்டிற்குள் புகுந்து மான்களை விரட்டுகின்றன. இவ்வாறு விரட்டப்படும் மான்கள் நாய்கள் கடித்து குதறியும், வாகனங்களில் அடிபட்டும் இறக்க நேரிடுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE