சென்னை-மதுரை இடையே மின் மயத்துடன் 3வது அகல ரயில்பாதை: ரயில்வே வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை-மதுரை இடையே மின் மயத்துடன் 3வது அகல ரயில்பாதை: ரயில்வே வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : நவ 19, 2021 | கருத்துகள் (3)
Share
மதுரை:அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை- மதுரை இடையே மின் மயத்துடன் கூடிய 3வது அகல ரயில் பாதை பணிகளை தற்போதே திட்டமிட வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்குவதுடன், வெளிமாநில ரயில்களை துாத்துக்குடி, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என மதுரையில் தென் மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்கள்

மதுரை:அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை- மதுரை இடையே மின் மயத்துடன் கூடிய 3வது அகல ரயில் பாதை பணிகளை தற்போதே திட்டமிட வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்குவதுடன், வெளிமாநில ரயில்களை துாத்துக்குடி, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என மதுரையில் தென் மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மல்லையா தலைமை வகித்தார். முதன்மை போக்குவரத்து மேலாளர் நீனு இட்டியரா, முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லுாரி, ரயில்வே கட்டுமான நிர்வாக அதிகாரி பிரபுல்லா வர்மா, முதன்மை பாதுகாப்பு அதிகாரி சரவணன், கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் பங்கேற்றனர்.

காங்கிரஸ் எம்.பி.,க்கள் நவாஸ்கனி (ராமநாதபுரம்), விஜய்வசந்த்(கன்னியாகுமரி) தவிர 14 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:


திருநெல்வேலி புதிய கோட்டம்

வைகோ, ம.தி.மு.க., பொது செயலாளர்: கொரோனா தொற்றால் நாடு முழுவதும் நாலாயிரம் ரயில்வே ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும். பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி - கிணத்துக்கடவு வழித்தடத்தை மதுரைக்கு மாற்ற வேண்டும். ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையத்தை மதுரைக்கு மாற்ற வேண்டும்.

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டும். மதுரை -பெங்களூரு பகல் நேர ரயில், செங்கோட்டை - கோவை, ராமேஸ்வரம் - கோவை இடையே புதிய ரயில்களை இயக்க வேண்டும். நாகர்கோவில்- ஐதராபாத் ரயில் விடவேண்டும். ஐதராபாத் சென்னை இடையே இயங்கும் மூன்று ரயில்களில் ஒன்றை நாகர்கோவில் வரை நீடிக்க வேண்டும்.


காரைக்குடியில் பிட்லைன்

கார்த்தி (காங்.,), சிவகங்கை: காரைக்குடியில் ரயில்களை பராமரிக்க புதிய பிட் லைன் அமைக்க வேண்டும். நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டும். ரயில்வேயில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.


கிழக்கு கடற்கரை ரயில் பாதை


கனிமொழி(தி.மு.க.,), துாத்துக்குடி: துாத்துக்குடியிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். கன்னியாகுமரியலிருந்து சென்னை வரை கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்க வேண்டும். குறைக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.


தேனி வரை ரயில் இயக்கப்படுமா

ரவீந்திரநாத் (அ.தி.மு.க.,), தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் 2011 முதல் நடக்கிறது. தற்போது தேனி வரை பணிகள் முடிந்துள்ளன. எனவே உடனடியாக மதுரை -தேனி வரை ரயில் இயக்க வேண்டும். தேனி - ஆண்டிப்பட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் - மதுரை வாராந்திர மூன்று முறை இயங்கும் குளிர்சாதன விரைவு ரயிலை போடி வரை இயக்க வேண்டும்.

பாண்டியன், திருப்பதி, பொதிகை விரைவு ரயில்கள் சோழவந்தானில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராமேஸ்வரம் டில்லி ரயில்


திருநாவுக்கரசர்(காங்.,), திருச்சி : பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை ரூ.10 ஆக குறைக்க வேண்டும். ஐ தராபாத் - சென்னை ரயிலை கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து டில்லிக்கு நேரடி ரயில் விட வேண்டும். புதுக்கோட்டையில் அயோத்தியா ரயில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.


மூன்றாவது அகல ரயில் பாதை

விஜயகுமார் (அ.தி.மு.க.,) கன்னியாகுமரி: அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை இடையே மின்மயத்துடன் கூடிய மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்க வேண்டும்.


மதுரை -- காரைக்குடி ரயில் பாதை

வெங்கடேசன்(மார்க்சிஸ்ட்), மதுரை: மதுரை சென்னை இடையே இயங்கும் தேஜஸ் ரயில் இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா விரைவு ரயில் காய்கறி வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் கட்டப்படும் பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மதுரை - மேலுார் காரைக்குடி புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.


திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் மேம்பாடு

மாணிக்கம்தாகூர் (காங்.,), விருதுநகர்: எய்ம்ஸ் மருத்துவமனை, சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றம் ஸ்டேஷனை மேம்படுத்திட வேண்டும். மதுரை-போடி ரயில்வே லைனில் செக்கானுாரணியில் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அனைத்து விரைவு ரயில்களும் திருத்தங்கல், திருமங்கலம், திருப்பரங்குன்றத்தில் நின்று செல்ல வேண்டும். விருதுநகர், சாத்துார் ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டும்.
கேரள எம்.பி.,க்கள் கொடிக்குன்னில் சுரேஷ், சோமபிரசாத் மற்றும் ஞானதிரவியம், தனுஷ் எம்.குமார் பேசினர். எம்.பி.,க்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X