கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தவறான மருத்துவச் சான்று வழங்குவதா உயர்நீதிமன்றம் அதிருப்தி

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை:தவறான மருத்துவச் சான்று குறித்து அதிருப்தியை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மருத்துவக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள இவ்வகையான டாக்டர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தஞ்சாவூர் டவுன் மேற்கு போலீசார் கோபிநாத் என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிந்தனர். கைதான அவருக்கு தஞ்சாவூர்

மதுரை:தவறான மருத்துவச் சான்று குறித்து அதிருப்தியை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மருத்துவக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள இவ்வகையான டாக்டர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தஞ்சாவூர் டவுன் மேற்கு போலீசார் கோபிநாத் என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிந்தனர். கைதான அவருக்கு தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் அனுமதித்தது. சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் 3 வாரங்களில் சரணடைய உத்தரவிட்டது. கோபிநாத் சரணடையவில்லை. அவருக்கு எதிராக கைது வாரன்ட்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது. அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவானது.

இதைத் தொடர்ந்து கோபிநாத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு செய்தார். விபத்தில் காயமடைந்து தஞ்சாவூரில் ஒரு மருத்துவமனையில் உள்நோயாளியாக 2 மாதங்கள் சிகிச்சை பெற்றதாக டாக்டரின் சான்றிதழ் சமர்ப்பித்தார்.நீதிபதி பி.புகேழந்தி உத்தரவு: கீழமை நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை மனுதாரர் மறைத்துள்ளார். மருத்துவச் சான்றிதழில் தவறு இருப்பதாக கருதி, உண்மைத் தன்மையை கண்டறிய விசாரிக்க இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவறான சான்று; அதை விடுப்பு நோக்கத்திற்காக மட்டுமே டாக்டர் வழங்கியுள்ளதாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இடைக்கால முன் ஜாமின் உத்தரவு மனுதாரரால் பெறப்பட்டது மற்றும் டாக்டரிடம் சான்று பெற்ற விதத்தை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத் துறைக்கு இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட டாக்டருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க இந்நீதிமன்ற உத்தரவு நகலை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் தவறான சான்றிதழ் வழங்கிய டாக்டருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை துவங்கியுள்ளதாக மருத்துவக் கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார். இவ்வழக்கில் மட்டுமல்ல. கடும் குற்றச்சாட்டிற்கு ஆளான ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு டாக்டர் வழங்கிய தவறான சான்று அடிப்படையில் இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்.,பட்டதாரிகள் டாக்டர் தொழில் செய்கின்றனர். சட்டப்படி தவறு என்ற உண்மையை உணராமல் விடுப்பு நோக்கத்திற்காக எந்த வகையான சான்றிதழையும் வழங்க முடியும் என்பதை ஒரு சலுகையாக எடுத்துக் கொள்கின்றனர். இந்நீதிமன்றம் டாக்டர்கள் மீது மரியாதை வைத்து, அவர்கள் வழங்கும் சான்றை நம்பி சில முடிவுகளை எடுக்கிறது. இத்தகைய தவறான சான்று வழங்கினால், எந்த டாக்டராலும் வழங்கப்படும் சான்றையும் இந்நீதிமன்றம் நம்ப முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.
சில டாக்டர்களால் உருவாக்கப்பட்டுள்ள இவ்வகையான அபிப்பிராயத்தை ஒழிப்பது மருத்துவக் கவுன்சிலின் கடமை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. மேலும் மருத்துவக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள இவ்வகையான டாக்டர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அவர் தவறான சான்று அடிப்படையில் முன்ஜாமின் மனு செய்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரை போலீசார் கைது செய்வர் என இந்நீதிமன்றம் நம்புகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X