ஞ்சிபுரம் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் அருகே 'எக்ஸ்பிரஸ் வே' எனும் விரைவு சாலை அமைக்க, நில எடுப்பில் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருதுகிறது.
இதனால், நில எடுப்பு முறைகேடை விசாரிக்கும்படி, சி.பி.சி.ஐ.டி., மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே, 'எக்ஸ்பிரஸ் வே' எனும் விரைவு சாலை அமைக்க, நில எடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நில எடுப்பு அலுவலகம், காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது.ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள நெமிலி கிராமத்தில் எடுக்கப்பட்ட நிலம் குறித்தும், அதற்கான இழப்பீடு கேட்டும், அகில் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவருக்கான இழப்பீடை, நில எடுப்பு அலுவலகம் வழங்கியதால், அவர் வழக்கை வாபஸ் பெற முயன்றார். ஆனால், இந்த வழக்கில் பி.டி.ஓ., கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளதால், வாபஸ் பெற அனுமதிக்க மாட்டோம் என, உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் மறுத்துள்ளார்.
மேலும், அவர் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள், அரசு அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தீர்ப்பு விபரம்: ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, நெமிலி மற்றும் ஆரியம்பாக்கம் கிராமத்தில், ஓ.எஸ்.ஆர்., எனப் படும் அரசு நிலத்தை, பி.டி.ஓ.,வின் கையெழு த்தை போலியாக போட்டு, நிறைய பேருக்கு விற்று உள்ளனர்.மார்க்கெட் மதிப்பான 3.67 கோடி ரூபாய்க்கு பதில், பல மடங்கு இழப்பீடு கொடுத்துஇருக்கின்றனர்.கடந்த 2018ல், நெடுஞ்சாலை குறித்து நில எடுப்பு விபரம் தெரிந்தவுடன், இந்நில விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்; லேஅவுட் போட்டுள்ளனர். ஒரு லெட்டரை வைத்து, ஓ.எஸ்.ஆர்., நிலத்தை எப்படி ரத்து செய்தனர்.ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ.,விடம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 16 சதுரடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. பி.டி.ஓ., நிலத்தை விற்றவர்களுக்கே, மீண்டும் இடத்தை ஒப்படைக்கிறார்; முழு உரிமையும் கொடுக்கப்படுகிறது.பின், 2018 ஜனவரியில், அந்த நிலங்கள், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
தொடர்ந்து அந்த நிலம் விற்கப்படுகிறது.இதையடுத்து, அந்த நிலங்களுக்கு நெடுஞ்சாலைத் துறையிடம் இழப்பீடு பெறுகின்றனர். மதிப்பீடு சரிபார்க்காமல், இஷ்டம் போல் இழப்பீடு கொடுக்கப்படுகிறது.'எந்த கடிதமும் நான் கொடுக்கவில்லை' என, பி.டி.ஓ., தெரிவிக்கிறார். இதில், நடந்துள்ள விவகாரம் குறித்து, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தபோதும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து சிறப்பு தாசில்தார், சார் -பதிவாளர், அவரது உதவியாளர், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய ஆய்வாளர், சிறப்பு டி.ஆர்.ஓ., - பி.டி.ஓ., முன்னாள் சிறப்பு டி.ஆர்.ஓ., மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் என, அனைவரையும் நீதிமன்றம் விசாரித்து உள்ளது.சி.பி.சி.ஐ.டி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த வழக்கில் நுழைக்கப்படுகின்றனர். பி.டி.ஓ., அல்லது அவருக்கு இணையான நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். விசாரணை அதிகாரி, இரண்டு வாரத்துக்குள் சி.பி.சி.ஐ.டி.,யிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.ஓ.எஸ்.ஆர்., நிலங்களை ரத்து செய்ய, நான் ஆவணங்களை கொடுக்கவில்லை என, பி.டி.ஓ., கூறுவதை நீதிமன்றம் ஏற்கவில்லை.அந்நிலத்தின் தன்மையை ரத்து செய்த அன்றே, பத்திரப்பதிவு நடந்துள்ளது; அடுத்தடுத்து விசாரிக்க வேண்டும்.சதி செயலில் ஈடுபட்ட பதிவுத்துறை நடவடிக்கையை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும்.
மற்ற கிராமங்களில் கொடுக்கப்பட்ட இழப்பீடு குறித்தும் கொடுக்கப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.பொதுமக்களின் பணம், கோடி கோடியாய் இழப்பாகிவிட்டது; 300 கோடி ரூபாய் புழங்கியுள்ளது.ஆவணங்கள் அனைத்தையும் வாங்குங்கள் என, சி.பி.சி.ஐ.டி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. போலீஸ் எந்த ஆவணங்களை கேட்டாலும் பதிவுத் துறை கொடுக்க வேண்டும்.மேல் பரிவர்த்தனை எதுவும் நடக்கக் கூடாது. மேல்நடவடிக்கை எடுத்து, ஆவணங்களை பாதுகாக்க, கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது.பொதுத்துறை செயலர், இந்த விசாரணைக்கு எந்த அளவு சீக்கிரம் அனுமதி தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுமதி தர வேண்டும். புதிதாக சேர்ந்துள்ளோம் என, யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி நியமனம்
ஓ.எஸ்.ஆர்., நிலத்தில் நடந்த மோசடி குறித்து, விசாரணை அதிகாரியாக, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் என்பவரை நியமித்து, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். அவரிடம் இந்த விசாரணை குறித்து கேட்டபோது, ''நிலம் சம்பந்தமான ஆவணங்களை திரட்டி வருகிறோம். சி.பி.சி.ஐ.டி., பிரிவில் புகார் அளிக்க உள்ளோம்,'' என்றார்.
ஓ.எஸ்.ஆர்., நிலம் என்றால் என்ன?
ரியல் எஸ்டேட் தொழிலில் ஒருவர் லே அவுட் போடும்போது, மொத்த நிலத்தில், 30 சதவீதம், பொது பயன்பாட்டுக்கு விட வேண்டும். பள்ளி, பூங்கா, சாலை, சமுதாய கூடம் போன்றவை அதில் கட்டப்படும். இவற்றையே ஓ.எஸ்.ஆர்., நிலம் என்பர்.இந்த நிலம், சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலத்தை, பி.டி.ஓ., கொடுத்த கடிதத்தால் ரத்து செய்யப்பட்டு, அவை பதிவுத்துறையில் பதிவும் செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட அரசு நிலங்களுக்கு பட்டா பெற்ற சிலர், தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் கோடி கோடியாய் இழப்பீடு பெற்றதாக, இந்த வழக்கு செல்கிறது.
ரூ.33 கோடி இழப்பீடுபிரச்னையே தீரலை!
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பீமந்தாங்கலில், அரசு நிலத்திற்கு போலியாக பட்டா பெற்று, அந்த நிலத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவிடம் 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரம், பெரும் பூதாகரமாக கிளம்பியது. இந்த வழக்கை, காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.எஸ்.ஆர்., நிலம் எனப்படும் அரசு நிலங்களுக்கு பட்டா பெற்று, அதை 'எக்ஸ்பிரஸ் வே' நெடுஞ்சாலைக்கு கொடுத்து, கோடி கோடியாய் சம்பாதித்துள்ள விவகாரம், சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE