உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எல்.சுரேஷ், பணகுடி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு புரியாது...' என்ற கவிஞர் வாலியின் வரிகள், தமிழக அரசுக்கு சாலப் பொருத்தம். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டும் வேறு கட்சிகள் என்றாலும், அவற்றிற்கு இடையே பல ஒற்றுமைகளும் உண்டு. அதைத் தான், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், 'இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று வர்ணித்திருந்தார்.
ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது, ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சி நிர்வாகிகளுக்கும் 'கமிஷன்' வழங்கப்படும். இரு கட்சியினரும் வெளியே தான் எதிரி போல தெரிவர்; ஆனால், கொள்ளையடிப்பதில் இருவரும் பங்காளிகள்! சென்னையின் வெள்ளப் பாதிப்புக்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். கேட்பதற்கே வேடிக்கையாக இல்லை?
அதிகாரிகளின் பட்டியலும், ஒப்பந்ததாரர்களின் விபரமும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் உள்ளது. வெள்ளப் பாதிப்புக்கு காரணமான அரசு அதிகாரிகளை, 'டிஸ்மிஸ்' செய்து, ஒப்பந்ததாரரிடம் தொகையை திரும்ப பெற்றால், அது சரியான நடவடிக்கை. இவர்கள், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதும், ஒப்பந்ததாரரின் பெயரை 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்ப்பதும் ஏதாவது பலன் தருமா?

ஒப்பந்ததாரர் பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்தால், தன் வாரிசு பெயரில் ஒப்பந்தம் பெறுவார். வேறொரு இடத்திற்கும் செல்லும் அதிகாரியும் 'ஜாலி'யாக தான் இருப்பார். திருடப்பட்ட மக்களின் வரிப்பணம் திரும்ப வராது! இக்கடிதத்தின் துவக்கத்தில், வாலி எழுதிய வரியை குறிப்பிட்டேன் அல்லவா? அதற்கான விளக்கம் இதோ...மழை வெள்ளத்துக்கு காரணமான அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை நிச்சயம் எனக் கூறினர் அல்லவா?
இப்போது, 'பிளேட்'டை அப்படியே திருப்பி போட்டு, 'மழைக்காலம் முடிந்ததும், மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க, தனி ஆணையம் அமைக்கப்படுவது உறுதி' என, தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுவரை அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து, யாராவது தண்டனை பெற்று உள்ளனரா? விசாரணை ஆணையம் என்பது, மக்களை ஏமாற்றும் வித்தை அவ்வளவு தான்; புரிந்துக் கொள்ளுங்கள் பொது மக்களே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE