அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி: தி.மு.க., ஆட்சி காலத்தில் கச்சத்தீவு எப்படி பறிபோனதோ அது போல, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையும் பறிபோய் விடுமோ என்ற அச்சம், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக எந்த விவகாரம் கிடைத்தாலும், அதை விடக் கூடாது. சிறப்பாக செய்து விட வேண்டும் என்ற, அ.தி.மு.க.,வின் எண்ணம், தமிழக மக்களின் அச்சமாக வெளிப்படுகிறதோ...
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பேச்சு: பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, மத்திய அரசு எடுத்த மிக மோசமான நடவடிக்கை. ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்று வரை சாமானிய மக்கள் அதனால் பாதித்து வருகின்றனர்.
இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் மறந்தாலும், உங்களைப் போன்ற எதிர்க்கட்சியினர் மறக்க மாட்டார்கள் போலிருக்கிறதே!
ஹஜ் கமிட்டி உறுப்பினர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: புனித ஹஜ் பயணம் செல்வோர், இதுவரை சென்னையிலிருந்து சென்று வந்தனர். இப்போது, கொச்சி சென்று தான் செல்ல முடியும். எனவே, மீண்டும் சென்னையிலிருந்து செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
சிறுபான்மையினரின் முக்கிய கோரிக்கையான இதை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லையே ஏன்... அவர்கள் இதை அணுகினால், உடனடியாக தீர்ந்து விடும் என நினைக்கின்றனரா?
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: குடிநீருடன் கழிவு நீரும் மழை நீரும் கலந்து வருகிறது. இதனால், பல்வேறு நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, தெரு குழாய்களை, சாக்கடை வடிகால் மட்டத்தை விட, உயர்த்தி அமைத்து தர வேண்டும்.

முதலில், மழை நீர் வடிய, இந்த அரசு வழி செய்தால் போதும். சாக்கடை வடிகால் மட்டத்தை உயர்த்துகிறேன் என கிளம்பி, கட்சியினரிடம் கான்ட்ராக்டை கொடுத்து அவர் களை வளப்படுத்தி விடப் போகிறது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கும் பல இன்னல்கள் வந்து விட்டன. நிர்வாகத் திறமையில்லாத அரசை முதல்வர் நடத்தி வருகிறார். அதற்கு சென்னையில் பெய்த மழை, வெள்ளமே சாட்சி.
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், தி.மு.க.,தலைமையில் அமைந் துள்ள அரசு, ராசியில்லாத அரசு என்கிறீர்களா?
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவில் சொத்துக்களுக்கு, அந்த கோவிலின் தெய்வங்களே உரிமையாளர் என்பது சட்டம். கோவில்களின் ஒரு சிறு துரும்பு மீது கூட அரசுக்கு உரிமை இல்லை. கோவில்களை வருவாய் பெருக்கும், வர்த்தக நிறுவனங்களாகக் கருதி செயல்படும் எண்ணத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
முதலில், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அந்த அரசு துறையை கலைத்து விட்டு, கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் வழங்க வேண்டும். அப்போது தான் கோவில்கள், கோவில்களாக மாறும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE