புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் இதனை அவர் தெரிவித்தார்.

உ .பி.,யின் மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பேசியதாவது:
அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.
ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.

போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும். இவர்கள் தங்களின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வரவேற்பு
இந்த அறிவிப்பை பஞ்சாப் விவசாய அமைப்பினர் வரவேற்றுள்ளனர். முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டனர் அமரீந்தர்சிங் , மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.