பொது செய்தி

தமிழ்நாடு

தெருவோரம் வாசிக்கிறது... ஒரு வரலாறு!

Updated : நவ 20, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மென்வெயிலில் மெதுவாய்க் கடந்து செல்லும் காற்றிலே, வலதும் இடதுமாய்ப் படபடத்து தலை துவட்டுகின்றன அந்த புத்தகங்கள்.ஏதோ கடை விரித்திருக்கிறாரோ என்று பார்த்தால், கடைக்கண் பார்வையில் அந்த புத்தகங்களை சாந்தப்படுத்தி விட்டு, பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறார் அவர்.கோவை திருச்சி சாலை. சாந்தி கியர்ஸ் அருகே, நடைபாதை என்று கூட சொல்லிவிட முடியாத சாலையோரம். ஒரு சின்ன தரை
 தெருவோரம் வாசிக்கிறது... ஒரு வரலாறு!

மென்வெயிலில் மெதுவாய்க் கடந்து செல்லும் காற்றிலே, வலதும் இடதுமாய்ப் படபடத்து தலை துவட்டுகின்றன அந்த புத்தகங்கள்.ஏதோ கடை விரித்திருக்கிறாரோ என்று பார்த்தால், கடைக்கண் பார்வையில் அந்த புத்தகங்களை சாந்தப்படுத்தி விட்டு, பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறார் அவர்.

கோவை திருச்சி சாலை. சாந்தி கியர்ஸ் அருகே, நடைபாதை என்று கூட சொல்லிவிட முடியாத சாலையோரம். ஒரு சின்ன தரை விரிப்பில், சில புத்தகங்களும் நாளிதழ்களும் பரப்பிக் கிடக்க, 'சத்திய சோதனை' படித்தபடி அமர்ந்திருந்தார் ஒரு முதியவர். அந்தக் காட்சி, நம்மைக் கடந்து செல்லவிடவில்லை.யாசக கோலத்தில் வாசித்துக் கொண்டிருந்த அந்த பெரியவரை நெருங்கிப் பேசினோம்...''அய்யா... இங்க ஏன்யா உக்காந்திருக்கீங்க?"

"உன் வீட்ல நீ உட்காந்திருக்கிறப்ப இந்தக் கேள்வியைக் கேட்டா நீ என்ன சொல்லுவ?" கூர்மையாய் வந்தது பதில்.

"இதான் என் வீடு. உங்ககூட பேச எனக்கு நேரமில்லை. கிளம்புங்க ப்ளீஸ்!"விடாப்பிடியாய் பேசிக் கொண்டிருந்த நம்மிடம், கொஞ்சம் கனிவு காட்டி பேசத்துவங்கினார் பெரியவர். பேசியதில் சில விஷயங்கள் தெரியவந்தன...

பெயர் லட்சுமணன்; ஊர் சின்னியம்பாளையம். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1972ல் பி.எஸ்.ஜி.,டெக்கில் உலோகவியல் படித்திருக்கிறார். பல பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். அவ்வளவு உயரத்தில் இருந்தவர், இங்கே இப்படி... எப்படி...

''சென்னையில 20, 25 வருஷம் இருந்தேன். அஞ்சு மொழி அத்துப்படி. மாக்ஸ் முல்லர்ல ஜெர்மனி இரண்டு செமஸ்டர் படிச்சேன். ரஷ்ய துாதரகம் மூலமா, ஒரு செமஸ்டர் ரஷ்ய மொழி படிச்சேன். ஹிந்தி நல்லாத்தெரியும். 'மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேசன்', 'அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெட்டல்', 'இண்டியன் பவுண்ட்ரி மேன் சொசைட்டி' இதுலெல்லாம் மெம்பரா இருந்திருக்கேன். சிலதுல ஆயுட்கால உறுப்பினர். மெட்ராஸ் மெட்டலர்ஜிகல் சொசைட்டில 88ல செகரட்டரியா இருந்துருக்கேன்!''

தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையிடையே தெள்ளத்தெளிவான ஆங்கிலம் அருவியாய் வந்து விழுகிறது. ஆங்கிலக் கவி ஜான் மில்டன், ரோமப் பேரரசன், கணியன் பூங்குன்றன், பட்டினத்தார், காந்தி வரலாறு வரிசையில் கே.ஜி.,பக்தவத்சலத்தின் புத்தகம் வரை பலவற்றிலிருந்தும் பல வாக்கியங்களை அச்சுப்பிசகாமல் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.


பேச்சு தடம் மாறியது...

''தொண்ணுத்தி ஆறுல இங்கவந்தேன். சில கம்பெனிகள்ல வேலை பாத்துட்டு, கடைசியா ஒரு பவுண்டரில வேலை பார்த்தேன். ஒரு நாள் கூட வேலை பார்த்த வடமாநில சின்னப்பையனுக்கு, தலைல அடிபட்டுருச்சு. சாகப்பொழைக்கக் கெடந்தான் பையன்.முதலாளி பெரிய பணக்காரன். ஆனா அந்தப் பையனுக்கு உதவ மறுத்துட்டான். கான்ட்ராக்டரும் உதவலை. ரத்தம் ஒழுக ஒழுக அந்தப் பையன் சரிஞ்சு விழுகுறதை என் கண்ணால பார்த்தேன். அந்த நொடியில, உலகமே வெறுத்துருச்சு.போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு வெளிய வந்துட்டேன்...

அன்னிலயிருந்து இதான் என் வீடு. சுத்தி இருக்குற இந்த புத்தகங்கள்தான் என் சொந்தம். ஒரு காலத்துல வசதியான குடும்பம்தான். இப்போ யாரு எங்க இருக்காங்கன்னு தெரியாது. யாரையும் நான் தேடிப்போறதில்லை. யாரும் தேடி வரவுமில்லை!''அந்தப் பேச்சில் வறுமை, வெறுமை எதுவும் வெளிப்படவில்லை. உண்மை தெறித்து விழுந்தது...

சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை. சாந்தி சோஷியல் சர்வீஸ் போடும் இலவச உணவுதான் தினமும்.சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததையும் கூடத் தெரிந்து வைத்திருக்கிறார்.

அவரைப் பற்றிப் பேசும்போது, 'மனுஷன் மகராசன்' என்று வானம் நோக்கி கையை உயர்த்துகிறார்.

வாசிப்பைப் பற்றி பேசுகிறார்...''எடிசன் படிச்சது மூணாம் கிளாஸ்தான். விஞ்ஞானியா ஆகலையா...காமராசர் என்ன படிச்சாரு... அவராலதான் என்னை மாதிரி ஆளுங்க படிக்க முடிஞ்சது. எல்லாரும் வாசிக்கணும். எதையாவது படிச்சிட்டே இருக்கணும்!''மனதின் பிறழ்வு பேச்சிலும் வெளிப்படுகிறது..."நான் வடக்கே எம்.பி.,யா நிக்கப் போறேன். வர்ற சம்பளத்துல, ஆதரவற்ற குழந்தைங்கள படிக்க வைக்கப் போறேன். இந்த சாராயக்கடை, சிகரெட் விக்கிறது எல்லாத்தையும் நிறுத்தப் போறேன்!''லட்சுமணன்... காலமும் சூழலும் கிழித்துப் போட்ட நல்ல புத்தகம்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannaandhai -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-202120:53:18 IST Report Abuse
Mannaandhai Please don't repeat the same comment
Rate this:
Cancel
Mannaandhai -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-202120:53:18 IST Report Abuse
Mannaandhai உலோபியிடம் பணியாற்றி வெறுப்புற்றதாகச் சொல்லும் உலோக (கடின/இரும்பு) மனம் இல்லாத உலோகவியல் பட்டதாரியின் நிலை அதிர்ச்சியளிக்கிறது. அவர் தரும் விளக்கம் நமக்கு எட்டவில்லை. ஆயினும் அஷ்டவக்கிரர் கீதையில் அஷ்டவக்கிரர் கூறுகிறார் : ஒரு மனிதனுக்கு ஞானம் என்பது குதிரையில் ஏறும்போது ஒரு காலை சேணத்தில் வைத்துவிட்டு மறுகாலை தூக்கிப் போட்டுக்கொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் கூட தோன்றும் என்று . வாழ்வின் கணக்கு யாரே அறிவார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X