சேலம்: சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி இலக்கை பூர்த்தி செய்யாத டாக்டர்களுக்கு மெமோ வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது திரும்ப பெறப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை, 19.93 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 9.07 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும், 8.21 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் தகுதி பெற்றும் இரண்டாம் தவணை செலுத்தாதவர்களாக, 3.88 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்காக, வாரத்துக்கு இரண்டு நாள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மருத்துவமனைக்கும், டாக்டர்களுக்கும் தடுப்பூசி எண்ணிக்கை இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. சமீபத்தில் இதை நிறைவேற்றாத அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு, விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டது. இது டாக்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுகாதாரதுறை செயலர் வரை இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து சுமுகமாக பிரச்சனையை தீர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட மெமோ திரும்ப பெறப்பட்டது.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: தடுப்பூசி இலக்கை எட்டாத மருத்துவர்களுக்கு மெமோ வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கங்கள் குரல் கொடுத்ததையடுத்து, மெமோ திரும்ப பெறப்பட்டது. இதே போல், தடுப்பூசிக்கான இலக்கு நிர்ணயிப்பது, கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நளினி கூறுகையில்,''விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட கடிதங்கள் திரும்ப பெறப்பட்டன. சுகாதார பணிகள் வழக்கம் போல் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்து வருகின்றன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE