கிருஷ்ணகிரி: தொடர் மழையால் காட்டாறு நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், வேப்பனஹள்ளி அருகே மலைகிராமத்திலுள்ள மக் கள் தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, நாரலப்பள்ளி பஞ்.,ல் உள்ளது ஏக்கல்நத்தம் மலை கிராமம். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 997 பேர் வசிக்கின்றனர். கடந்த ஐந்து தலைமுறைகளாக இங்கு வசிக்கும் இவர்கள், சாலைக்காக, 50 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இப்பகுதி மக்கள் தங்கள் தேவைகளுக்காக தேர்தல் புறக்கணிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை காட்டிவந்த நிலையில், 2.50 கோடி மதிப்பில் இக்கிராமத்துக்கு நடப்பாண்டில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதத்திற்குள் சாலைகளில் பிளவும், தண்ணீர் தேங்கியும் இருப்பதால் மலைகிராம மக்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, வனப்பகுதி தலைவர் சென்னப்பன் கூறியதாவது: ஏக்கல்நத்தம் பகுதி மக்கள் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்தபோதே சாலை வசதிக்கு போராடி வருகிறோம். தற்போது அவசரகதியில் முறையாக போடாத சாலையால் மக்கள் மலையிலிருந்து கீழிறங்க முடியாமல் தவிக்கிறோம். சாலைகளில் ஆங்காங்கே பிளவுகளும், மலைப்பகுதி சாலையின் இரு கல்வெட்டு பகுதிகளிலும், காட்டாற்று நீர் தேங்கியுள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களாகவே பிரச்னை இருந்த நிலையில், தற்போது தொடர்மழையால் போக்குவரத்தின்றி, கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதி வழியாகவும் மக்கள் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். இங்குள்ள இருளர் காலனி வீடுகள், மழையால் இடிந்து விழும் சூழலில் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களின்றி தவித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE