புதுடில்லி :சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது ஏன் என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விளக்கம் அளித்தார். ''மூன்று வேளாண் சட்டங்களின் நன்மைகளை, விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்,'' என, பிரதமர்
வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்ட திருத்த மசோதா, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதற்கு ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவ., ௨௬ முதல், டில்லியின் எல்லைகளில் மூன்று மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ௧௧ சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மூன்று சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது; விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்தது.
இந்நிலையில், 'டிவி' சேனல்கள் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:என் 50 ஆண்டு கால பொதுப்பணியில் விவசாயிகளின் துயரத்தை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் மக்கள் என்னை பிரதமராக்கியதும், விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தேன்.விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள் வழங்கியுள்ளோம்; இது, விவசாய சாகுபடியை அதிகரிக்க உதவியுள்ளது.'பசல் பீமா யோஜனா' என்ற பயிர் காப்பீடு திட்டத்தால், விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
கிராமப்புற விவசாய சந்தை கட்டமைப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது. 1,000 மண்டிகள் மின்னணு மண்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்காக நுண் பாசனத் திட்டத்துக்கான நிதி இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிதி நிலைமை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. சிறு விவசாயிகள் முன்னேற்றம் அடையவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பின் தான், இந்த சட்டங்களை நிறைவேற்றினோம்.
ஆனால், சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டது.
அதனால், விவசாயிகளின் ஒரு பகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்,வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் சொல்ல முயற்சித்தோம். போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பல சுற்று பேச்சு நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். ஆனால், போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களுக்கான ஆதரவை பெற முடியவில்லை. எங்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
அதனால், மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள், வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும்.இதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். நான் எதை செய்தேனோ, அதை விவசாயிகளின் நலனுக்காகவே செய்தேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, அதை தேசத்துக்காகவே செய்கிறேன்.
இந்த தேசத்தின் கனவுகளும், உங்களின் கனவுகளும் நனவாவதற்காக இன்னும் கடினமாக உழைப்பேன். விவசாயிகளின் நலனும், விவசாய மேம்பாடும் தான் எங்களின் பிரதான பணி.நாட்டில் விவசாயத் துறையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறைந்தபட்ச ஆதார விலையை வலுப்படுத்த விவசாயிகள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
போராட்டம் இன்னும் முடியவில்லை
பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது:மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது, நாங்கள் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டத்தில் உயிரிழந்த 750க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும், போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியினர், தொழிலாளர்கள், பெண்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். எங்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை. விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதாவை, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் போராட்டத்தை முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வேளாண் அமைச்சர் கூறுவது என்ன?
புதுடில்லி ;மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பதில் உள்ள தடைகளை நீக்கும் நோக்கிலும், சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதியும், மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் பலன் அளிக்க கூடியவை. விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விவசாய அமைப்புகளிடம் இந்த சட்டங்களின் பலன்கள் பற்றி எடுத்துக் கூறியும், அவர்களை ஏற்க வைக்க முடியாமல் போனது பெரும் வருத்தம் அளிக்கிறது. விவசாயிகள் நலனில் மத்திய அரசு பெரும் அக்கறை வைத்துள்ளது. அவர்களின் சம்மதத்தை பெற முடியாமல் போனதால், மூன்று சட்டங்களை வாபஸ் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
வாபஸ் பெறுவது எப்படி?
சட்டத்துறை முன்னாள் செயலர் பி.கே.மல்ஹோத்ரா கூறியதாவது:அரசியலமைப்பு சட்டப்படி எவ்வாறு சட்டம் இயற்றப்படுகிறதோ, அதே முறையில் தான் சட்டத்தை திரும்ப பெறவும் வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ௨௪௫வது பிரிவு, பார்லி.,க்கு சட்டங்களை இயற்றவும், அதை
திருத்தம் செய்து திரும்ப பெறவும் அதிகாரம் வழங்கியுள்ளது.வேளாண் சட்டங்களை மத்திய அரசு இரு வழிகளில் வாபஸ் பெற முடியும். சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவை, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றுவது முதல் வழி. அவசர சட்டம் பிறப்பித்து, மூன்று சட்டங்களையும் திரும்ப பெறுவது இரண்டாவது வழி.ஆனால், அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்த அவசர சட்டத்துக்கு பதிலாக மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன் வாபசான மசோதாக்கள்
இதற்கு முன் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட பின், பல மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதில் முக்கியமான இரண்டு மசோதாக்கள்:
* காங்கிரசைச் சேர்ந்த ராஜிவ் பிரதமராக இருந்த போது, 'இந்திய தபால் அலுவலக திருத்த மசோதா' பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங் மறுத்தார். இதையடுத்து மசோதா வாபஸ் பெறப்பட்டது.
* ராஜிவ் பிரதமராக இருந்த போது, 1988ல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 'அவதுாறு மசோதா' லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. கடும் எதிர்ப்பால் ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியாமல் மசோதா வாபஸ் பெறப்பட்டது.
* கடந்த 2015ல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற மசோதா தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை,
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE