கோவை: கட்டட கட்டுமானத் திற்கு பயன்படுத்தப்படும் டி.எம்.டி. ஸ்டீல் கம்பிகளின் விலை குறைந்தது.
வர்த்தகர்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கட்டட கட்டுமானப்பொருட்கள் விலை, கடந்த சில வாரங்களாக பல மடங்கு உயர்ந்திருந்த சூழலில் நேற்று திடீரென்று ஸ்டீல் மார்க்கெட்டில் சர்வதேச அளவில் பின்னடைவு ஏற்பட்டது.அதன் அடிப்படையில், கோவையில் கட்டட கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டி.எம்.டி.ஸ்டீல் கம்பிகளின் விலை குறைந்தது.முதல் தரத்திலுள்ள ஏழு நிறுவனங்களில் ஸ்டீல் கிலோ ரூ.88க்கு விற்றது ரூ.74க்கும், இரண்டாம் தரத்திலுள்ள ஐந்து நிறுவன ஸ்டீல் கம்பிகள் கிலோ ரூ.72க்கு விற்றது 62 ரூபாய்க்கும், மூன்றாவது தரத்திலான ஏழு நிறுவன ஸ்டீல் கம்பி கிலோ 70 ரூபாய்க்கும் விற்றது.இந்த திடீர் விலை குறைவு குறித்து ஸ்டீல் வியாபாரிகள் கூறியதாவது:நம்நாட்டின் ஒட்டுமொத்த இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான, இன்கார்டு, அயர்ன் ஓர், பில்லெட் ஆகியவை ஜாம்ஷெட்பூர், பிலாய், ரெய்ப்பூர், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுக்க சப்ளை செய்யப்படுகிறது.சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், மின்உற்பத்தி தடைபட்டது. அதனால் அவர்கள் நம்மிடமிருந்து இரும்பு உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெற்று வந்தனர். தற்போது நிலைமை சீராகி விட்டது. மேலும் பல நாடுகளில் நம்மிடமிருந்து வாங்கும் இரும்பின் அளவு குறைந்து விட்டது.கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும் டி.எம்.டி.ஸ்டீல் ரகங்களின் விலை கிலோ 10 முதல் 14 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒத்துவராத மூன்று மசோதாக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அதே போல் மற்ற விலைவாசிகளையும் கட்டாயம் குறைக்கும். அப்போது கட்டட கட்டுமானப்பொருட்களின் விலை மேலும் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.கட்டுமான பணியில் தொய்வு ஏன்?நம் நாட்டில், பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதால் கட்டட கட்டுமானப்பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துப்போயுள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற கட்டட கட்டுமானப் பணியாளர்கள், மழை வெள்ளம் காரணமாக சொந்த ஊர் திரும்பவில்லை. இதுவும் கட்டட கட்டுமானப்பணிகள் துரிதமாக நடைபெறாததற்கு, ஒரு காரணமாக அமைந்துள்ளது.ஒரு வீட்டுக்கு எவ்வளவு ரூபாய் குறையும்சாதாரணமாக ஆயிரம் சதுர அடிக்கு ஒரு வீடு கட்டுவதற்கு, குறைந்தது இரண்டரை டன் கம்பி தேவைப்படும். விலை உயர்வின் போது கிலோ 88 ரூபாய்க்கு கம்பி வாங்கினால், 2,20,000 ரூபாய் ஆகும். தற்போது விலை குறைப்பின் போது வாங்கினால், 1,85,000 ஆகிறது. விலை குறைப்பினால் உரிமையாளருக்கு 35,000 ரூபாய் குறைகிறது. கம்பியில் மட்டும் இவ்வளவு விலை குறைப்பு என்றால் மற்ற பொருட்களின் விலையும் குறைந்தால், ஒட்டுமொத்தமாக கட்டட கட்டுமான விலையும் குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE