சென்னை :''நிதி நிலைமையை சீராக்க, தமிழக அரசுக்கு தேவையான பரிந்துரைகளை தெரிவித்தால், உடனடியாக அவற்றில் கவனம் செலுத்தி, நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின், தென் மண்டல அளவிலான 53வது மாநாடு, கோவையில் நேற்று நடந்தது. தென் மண்டல தலைவர் ஜலபதி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், காணொலி வழியாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பட்டய கணக்காளர்களின் அறிவுத்திறன், நாட்டை ஆள்பவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், பல வழிகளில் துணையாக உள்ளது.நிதித்துறை, கார்ப்பரேட் நிர்வாகம், கணக்கு தணிக்கை போன்ற செயல்பாடுகளில், அரசுக்கு உதவுவதோடு, உங்கள் பணி நின்று விடுவதில்லை.
அவை சார்ந்த சட்டங்களை இயற்றுவதிலும், வேளாண் வளர்ச்சி செயல்பாடுகளிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறீர்கள்.
எனவே, பட்டய கணக்காளர்களை, 'நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள்' என்று அழைப்பது சரியாக இருக்கும். உலக அளவில் நம் நாடு முன்னணியில் இருக்க வலுவான நிதி கட்டமைப்புகளும், ஒழுங்கு முறைகளும் தேவை.
அதற்கான யோசனைகளை வழங்குவதில், உங்கள் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும், வடிவமைப்பதிலும், பட்டய கணக்காளர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். இந்த நற்பெயர் எப்போதும் நிலைத்து நிற்கும் வகையில், அரசின் கரங்களை வலுப்படுத்தும் வகையில், உங்கள் பணிகள் அமைய வேண்டும்.
பொருளாதார குற்றப்பிரிவிலும், ஊழல் தடுப்பு பிரிவிலும், நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க, தமிழக அரசு புதிய தணிக்கை பிரிவுகளை, இப்போது துவக்கி உள்ளது. நிதி நிலையை சீராக்குவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளிலும், தமிழக அரசுக்கு தேவையான பரிந்துரைகளை நீங்கள் தெரிவித்தால், உடனடியாக அவற்றில் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்த, நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE