தமிழ்நாடு

வேளாண் சட்டங்கள் வாபஸ்; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 19, 2021
Share
Advertisement
- நமது நிருபர்கள் குழு - மத்திய அரசு, வேளாண் திருத்த சட்டங்களை, பார்லிமென்ட்டில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென போராடினர். இந்நிலையில், மூன்று வேளாண் சட்ட திட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், ஓராண்டு நடந்த விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சி

- நமது நிருபர்கள் குழு -

மத்திய அரசு, வேளாண் திருத்த சட்டங்களை, பார்லிமென்ட்டில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென போராடினர். இந்நிலையில், மூன்று வேளாண் சட்ட திட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், ஓராண்டு நடந்த விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரகுபதி, மூலனுார்:வேளாண் திருத்த சட்டங்களால், வேளாண் பொருட்களுக்கான விலையை, மற்ற நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும். அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர்; போராட்டம் துவங்கிய, நவ., 26க்கு முன்பாக, திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி. பாராளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டி, சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.கவுரீஸ்வரன், ஊத்துக்குளி:நீண்ட நாள் போராட்டத்துக்கு பின், விவசாயிகள் எதிர்த்த, வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளது. விவசாயிகள், விடாப்பிடியாக போராடியதன் விளைவாக, பிரதமர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.காளிமுத்து, தாராபுரம்:மத்திய அரசு, விவசாயிகளுக்காக இறங்கி வந்ததை வரவேற்கிறோம். இது, காலம்கடந்த செயல். முன்கூட்டியே, சட்ட திருத்தத்தை கைவிட்டிருந்தால், விவசாயிகள் உயிர் தப்பியிருக்கும். கடந்த ஓராண்டில், 700க்கும் அதிகமான விவசாயிகள் பலியாகியுள்ளனர்.வேளாண் சட்ட திருத்தம் கொண்டுவர, அனைத்து மாநில, விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, கருத்துக்கேட்ட பின்னரே, மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். வரும் காலத்தில், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது.கதிரேசன், திருப்பூர்:வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றது மகிழ்ச்சி; முன்கூட்டியே செய்திருக்கலாம். நமது நாட்டை சேர்ந்த, 750 விவசாயிகளின் உயிர் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றதை, உயிர்தியாகம் செய்த விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறோம்.பழனிசாமி, பல்லடம்:வேளாண் சட்டங்களால் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் விளை பொருட்கள் இருக்கும் என்பதால், விவசாயிகள் பயனடைவதும், மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. மாவட்ட, வட்ட அளவில் கிடங்குகள் அமைத்து, விவசாயிகள் பொறுப்பில் விடுவதால், விளைபொருட்களின் விலை குறையும்போது இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அர்ஜூனன், மாணிக்காபுரம்:வேளாண் சட்டங்களால் விளைபொருட்கள் தரம் இல்லை என்று கூறி வாங்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது. விளை பொருட்களுக்கு விலை கிடைக்குமா என்ற உத்தரவாதம் இல்லை. விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்காத வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். அரசே விளை பொருட்களை கொள்முதல் செய்து விற்கவோ, அல்லது இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான வசதிகளையோ அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.கார்த்தி, ராயர்பாளையம்:தமிழகத்தில் இருப்பு வைப்பதற்கு உண்டான கட்டமைப்புகள் உள்ளதால், தமிழகத்துக்கு வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இருக்காது என்றே தோன்றுகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதார விலை நிர்ணயித்தபின், ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. தரமான பொருட்களுக்கு என்றுமே தரமான விலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஈஸ்வரன், சின்னாரியபட்டி:வேளாண் சட்டங்களால் சில மாநிலங்களில் கமிஷன் மண்டிகள் பாதிக்கப்பட்டது உண்மை. அதனால், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூன்று சட்டங்களும் திரும்ப பெற்றதால் விவசாயிகள் இதற்கு மேல் வளர முடியாது. மீண்டும் வியாபாரிகளிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தெய்வசிகாமணி, அவிநாசிபாளையம்:வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியது தவறு. விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியில், இந்த சட்டங்கள் முக்கிய பங்காற்றும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், வாபஸ் பெற்றதன் மூலம், அது கேள்விக்குறியாகி விட்டது.ஈஸ்வரன், வெள்ளியம்பாளையம்:விவசாயிகள் உணர்வைப் புரிந்துகொண்டு மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. வாபஸ் பெற்றதால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.முத்துசாமி, வெள்ளகோவில்:வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொண்டது இந்திய விவசாயிகளின் ஒருமித்த வெற்றி. மூன்று வேளாண் சட்டங்களினால் விவசாயிகளுக்கு பலனில்லை என்றும் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே பயனடையும் என்றும் போராடிய நமது விவசாயிகளின் காலம் தாழ்த்திய வெற்றி என்றாலும், நல்ல விஷயம் தான்.துரைசாமி, ஒரத்துப்பாளையம்:கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், மக்காச்சோளத்துக்கு ஒரு கிலோ 22 ரூபாய்க்கு விற்பனையானது. வேளாண் சட்டம் அறிவித்த பின்பு விலை நிர்ணயம் இல்லாமல், ஒரு கிலோ, 12 ரூபாய்க்கு தான் விற்றது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது, கோடிக்கணக்கான விவசாயிகளின் வெற்றி. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுரேஷ்குமார், அவிநாசி:வேளாண் சட்டம் குறித்த புரிதல், அதில் உள்ள நன்மை, தீங்கு குறித்து, எங்களை போன்ற கடைக்கோடி கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது; அது தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும் யாரும் இல்லை. அந்த சட்டம் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு விட்டது. அவரவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் கூறும் கருத்துக்களை தான், விவசாயிகளும் நம்புகின்றனர்.---சக்திவேல், அவிநாசி:வேளாண் சட்டங்கள் மூலம், இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விலை கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கான ஒப்பந்தத்தில் குளறுபடிகள் ஏற்படும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.வேளாண் சட்டங்களில் உள்ள சில அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. விவசாயிகள் விளைவிக்கும் தானியம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் வணிக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டங்கள் அவசியம் தேவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X