தொடருமா இந்த இணக்கம்?
சசிகலா விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் கன மழையால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளை, பன்னீர்செல்வம், பழனிசாமி தனித்தனியாக சென்று பார்வையிட்டனர். இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனித்தனியே நிவாரணம் வழங்கினர்.
இருவர் பின்னாலும், கட்சியினர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் தனித்தனியே செல்வதை கட்சியினர் விரும்பவில்லை.அதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களுக்கு, இருவரும் இணைந்து சென்றனர். பாதிப்பு பகுதிகளை இணைந்தே பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினர். இருவரும் இணைந்து செயல்பட்டது, கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இது தொடருமா என்ற சந்தேகம் மட்டும் தொடர்கிறது.
ஸ்டாலினுக்கு ரூ.1.50 கோடியில் கார்!'
டொயோட்டா லேண்ட் குரூசர்' போன்ற சொகுசு கார்களை பயன்படுத்தி வந்த முதல்வர் ஸ்டாலின், திடுமென 'ஜாகுவார் லேண்ட் குரூசர்' காருக்கு மாறி இருக்கிறார்.

சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஜாகுவார் லேண்ட் ரோவர் டிபெண்டர்' காரை, தனயன் உதயநிதி வாங்கி, தந்தை ஸ்டாலினுக்கு பரிசளித்திருப்பதாக அறிவாலயத்தில் செய்தி பரவி இருக்கிறது. கடந்த அக்., 22ல், உதயநிதிக்குச் சொந்தமான, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் பெயரில் TN 01 BV 2345 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தக் காரைத் தான், இனி ஸ்டாலின் பயன்படுத்த வேண்டும் என, உதயநிதி அன்பு கட்டளை போட்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.
சமீபத்தில், மழை- வெள்ளத்தை பார்வையிட, தென் மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்ட போது, புதிய கார் பயன்படுத்தப்பட்டதாம். லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு, இந்தியாவின் புனே நகரில் 'அசெம்பிள்' செய்யப்பட்ட இந்தக் காரில், சொகுசு இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் உள்ளன.
இந்த கார், பாதுகாப்பைப் பொறுத்தவரையில் சிறப்பான இடத்தைப் பெற்றது என குறிப்பிடும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், ஜாகுவார் லேண்ட் குரூசர் கார்கள், ஆறு முறை உருண்டாலும் உள்ளே இருக்கும் பயணிக்கு எந்த பிரச்னையும் இருக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என கூறுகின்றனர்.
இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, முதுகு, கை, கால் பகுதியில் 'மசாஜ்' செய்யும் வசதிகளும் இந்தக் காரில் உள்ளன என்றும் சொல்லும் பாதுகாப்பு அதிகாரிகள், இத்தனை சிறப்பு கொண்ட இந்தக் காரை பயன்படுத்துவதில், முதல்வருக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை என்கின்றனர்.
மீண்டும் போஸ்டர் யுத்தம்!
நேதாஜியின் ஐ.என்.ஏ., படையில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியிலிருந்து குறிப்பிட்ட ஜாதியினர் அதிக எண்ணிக்கையில் இடம் பெறவில்லை என, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விமர்சித்துள்ளார்.
அவரது விமர்சனத்திற்கு, குறிப்பிட்ட ஜாதியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளப்பி உள்ளது. 'வன்மையாக கண்டிக்கிறோம்' என்ற தலைப்பில், நேதாஜி இளைஞர் சங்கம் சார்பில், தென் மாவட்டங்களில் கண்டன 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'சமூகப் பதற்றத்தையும், ஜாதி ரீதியிலான பிரச்னைகளையும் உருவாக்கி வரும் அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமியை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சில ஜாதிகளின் அமைப்புகளும், ரவீந்திரன் துரைசாமிக்கு கூட்டாக ஆதரவு தெரிவிக்கும் போஸ்டர்களை ஒட்டி உள்ளன. இதனால், தென் மாவட்டங் களில் போஸ்டர் யுத்தம் தலைதுாக்கி உள்ளது.