தமிழக நிகழ்வுகள்
பொம்மை துப்பாக்கி காட்டிபணம் பறிக்க முயன்றவர்கள் கைது

டம்மி துப்பாக்கியால் வழிப்பறி முயற்சிபொம்மை துப்பாக்கியால் வழிப்பறி?வியாசர்பாடி: வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியைச் சேர்ந்தவர் வடமலை, 38; தனியார் ஊழியர்.இவர், நேற்று பணி முடிந்து வீட்டருகே வந்த போது, பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டுள்ளனர்.
வடமலை சத்தம் போடவே, அவர்கள் தப்பினர்.புகாரின்படி, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்ததில் வியாசர்பாடி, பி.வி.காலனி, 7வது தெருவைச் சேர்ந்த நிர்மல் குமார், 28; செங்குன்றம் அம்பேத்கர் நகர், 2வது தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 28, ஆகியோர் என தெரிந்தது. இருவரையும் கைது செய்து துப்பாக்கியை கைப்பற்றியதில், அது பொம்மை துப்பாக்கி என தெரிந்தது. இதை வைத்து, பல இடங்களில் வழிப்பறி செய்ததும் தெரிந்ததால், நேற்று இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கைது
கோவை:மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் பயிலும் 19 வயது மாணவி, ரேஸ்கோர்ஸ் போலீசில், பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தார். இதையடுத்து, பேராசிரியர் ரகுநாதன், 42 என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:அந்த மாணவிக்கு கடந்தாண்டு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கல்லுாரிக்கு சென்ற மாணவி சரியாக படிக்கவில்லை.
எனவே, அந்த மாணவியை, ஆசிரியர்கள் அறைக்கு வருமாறு துறை தலைவர் ரகுநாதன் அழைத்துள்ளார். அந்த மாணவியின் நிலை குறித்து கேட்டுள்ளார்.இதை தனக்கு சாதகமாக்கிய ரகுநாதன், மாணவியின் சொந்த ஊருக்கு 'நோட்ஸ்' கொடுப்பது போல் சென்றுள்ளார். அங்கு மாணவியை காரினுள் இழுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிஉள்ளார்.இவ்வாறு, போலீசார் கூறினர். பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேராசிரியர் ரகுநாதனுக்கு 2019ல் திருமணமாகி, கருத்து வேறுபாட்டால், ஓராண்டாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

எம்.எல்.ஏ., காரில் புகுந்த பாம்பு
திண்டிவனம்:திண்டிவனத்தில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த எம்.எல்.ஏ.,வின் காரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அர்ஜுனன் நேற்று காலை பார்வையிட்டார். திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் காரை நிறுத்தி, நடந்து சென்று, காந்தி நகரில் சேதங்களை பார்வையிட்டார்.
அப்போது, மழை நீரில் வந்த பாம்பு ஒன்று, எம்.எல்.ஏ.,வின் காருக்கு அடியில் புகுந்ததை கட்சியினர் பார்த்தனர். தீயணைப்பு வீரர்கள், காருக்குள் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காரை வாட்டர் சர்வீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ப்ரீ பயர் கேம்' விளையாட தடை; 213 சவரனுடன் சிறுவன் ஓட்டம்
வண்ணாரப்பேட்டை : வண்ணாரப்பேட்டையில், 'ஆன்லைன் ப்ரீ பயர் கேம்' விளையாட பெற்றோர் தடை விதித்ததால், வீட்டில் இருந்த 33 லட்சம் ரூபாய் பணம் மற்றும்213 சவரன் தங்க நகையுடன், நேபாளத்திற்கு தப்பிக்க முயன்ற 15 வயது சிறுவனை, போலீசார் பிடித்தனர்.
வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார், 45; குடிநீர் வாரிய லாரி ஒப்பந்ததாரர்.பத்தாம் வகுப்பு படிக்கும், ௧௫ வயதுள்ள இவரது இரண்டாவது மகன், வீட்டில் எந்நேரமும் மொபைல் போனில், 'ஆன்லைன் ப்ரீ பயர் கேம்' விளையாடி உள்ளான். இதை கவனித்த பெற்றோர், அவனை கண்டித்து, கேம் விளையாட தடை விதித்துள்ளனர்.
இதனால் தவித்து போன சிறுவன், வீட்டில் இருந்த 33 லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் நகையுடன், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினான்.மகனை காணவில்லை என தேடிய பெற்றோர், பணம், நகையும் காணாமல் போனதால், வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து சிறுவனை தேடினர். இந்நிலையில், சிறுவன் தான் கொண்டு சென்ற பணத்தில் புதிதாக 'ஐ போன்' வாங்கி, அதில் 'சிம் கார்டு' போட்டு பேசியுள்ளான். இதை வைத்து, நேற்று போலீசார் சிறுவனை பிடித்தனர்.
விசாரணையில், 'பிரீ பயர் கேம்' மூலம் மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா மற்றும் நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டு பகுதிகளில் நண்பர்கள் பழக்கமானதும், அவர்களிடம் பேசி நேபாளம் செல்ல இருந்ததும் தெரிந்தது.சிறுவனிடமிருந்து நகை, பணத்தை மீட்ட போலீசார், பெற்றோரை வரவழைத்து அவற்றை ஒப்படைத்து, சிறுவனையும் எச்சரித்து அனுப்பினர்.
நர்ஸிங் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: கல்லூரி தாளாளர் மீது போக்சோ வழக்கு; விடுதி காப்பாளர் கைது

ரெட்டியார்சத்திரம்:திண்டுக்கல்லில் பாலியல் தொல்லை கொடுப்பதாக சுரபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜோதிமுருகன் 42, விடுதி காப்பாளர் அர்ச்சனாவை 23, கைது செய்ய வலியுறுத்தி நர்ஸிங் கல்லுாரி மாணவிகள் மறியல் செய்தனர். ஜோதிமுருகன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜோதிமுருகன் நர்ஸிங், கேட்டரிங், பேஷன் டிசைனிங், பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை போன்றவற்றை நடத்தி வருகிறார். முத்தனம்பட்டியில் இவரது நர்ஸிங் கல்லுாரி உள்ளது.இங்கு 450க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 100க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று கல்லுாரி அருகே ரயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஏ.எஸ்.பி., அருண்கபிலன், தாசில்தார் ரமேஷ்பாபு பேச்சு நடத்தினர்.
உடன்பாடு ஏற்படாததால் திண்டுக்கல் -- பழநி பைபாஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி., ஸ்ரீனிவாசன், ஆர்.டி.ஓ., காசிசெல்வி வந்து பேச்சு நடத்தினர்.தாளாளர் தலைமறைவு அவர்களிடம், கல்லுாரி தாளாளரையும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவையும் கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என மாணவர்கள் கூறினர்.
தாளாளர் தலைமறைவானதால், காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தனர். தாளாளரின் மனைவி, தந்தையை தாடிக்கொம்பு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனை மொபைலில் வீடியோ படமாக மாணவிகளிடம் போலீசார் காட்டினர். இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மறியல் நடந்ததால் அப்பகுதி பொதுமக்கள், மாதர் சங்கம், வாலிபர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர்.
மாலை வரை ஜோதிமுருகனை கைது செய்யாததால், மீண்டும் 6:30 மணிக்கு மேல் மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.ஜோதிமுருகன் 2019 எம்.பி., தேர்தலில் அ.ம.மு.க., சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர். சில சினிமாக்களிலும் நடிகராக தலைகாட்டியுள்ளார். ஏற்கனவே இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கன மழைக்கு வீடு இடிந்து 9 பேர் பரிதாப பலி; ஒரே குடும்பத்தில் உயிரிழந்த 7 பேர் பலி
வேலுார்:பேர்ணாம்பட்டில் கன மழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, ஒன்பது பேர் பலியாகினர். இதில் ஏழு பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு கொட்டாற்றங்கரை ஓரம் உள்ள அஜ்ஜியா நகரைச் சேர்ந்தவர் அனிஷாபேகம், 63; கணவர் இறந்து விட்டார். வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்தார். மாடியில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசிக்கின்றனர்.
இடிபாடு
ஆந்திர மாநிலம், வி.கோட்டா பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அஜிஜியா நகரில் சில நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முழுதும் கன மழை பெய்ததால், அப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால், அங்கு வசித்தவர்களால் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில், காலை 6:30 மணிக்கு அனிஷாபேகத்தின் மாடி வீடு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அனிஷாபேகம், 63; அவரது மருமகள்கள் ரூகிநாஸ், 27; மிஸ்பா பாத்திமா, 23; பேத்திகள், அபீரா, 4; அப்ரா, 3. பேரன்கள் மன்னுல்லா, 8; தாமீத், 2 மற்றும் வாடகைக்கு மாடியில் குடியிருந்த ஆசிரியைகள் கவுசர், 45; தன்ஷிலா, 27 என ஏழு பெண்கள், இரண்டு சிறுவர்கள் ஆகிய ஒன்பது பேர் பலியாகினர். பலர் இடிபாடுகளில் சிக்கினர்.
பேர்ணாம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, ஒன்பது உடல்களையும் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 10 பேரை மீட்டு, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான வீடு, மழை நீரில் ஊறி இடிந்து விழுந்தது வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் உறவினர்கள் கலெக்டரை முற்றுகையிட்டு, வீடு இடிந்த பகுதியை ஆய்வு செய்யுமாறு கோஷமிட்டனர்.
.5 லட்சம் நிவாரணம்
முதல்வர் ஸ்டாலின், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்; படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுஉள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் தலைமறைவானவர் கைது
லக்னோ:'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை, பீஹாரில் போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக வேறு நபர்கள் தேர்வு எழுதியது வெளிச்சத்திற்கு வந்தது.
உ.பி., போலீசாரின் தீவிர விசாரணையில் பீஹாரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற நிலேஷ் குமார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர், மாணவர்களிடம் 30 - 40 லட்சம் ரூபாய் வரை பெற்று, நீட் தேர்வில் வேறு நபர்களை பங்கேற்க வைத்துள்ளார்.நீட் மட்டுமின்றி பீஹார் போலீஸ் பணி, ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்டவற்றிலும் மோசடி செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பிரேம் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், பீஹாரின் சாப்ரா கிராமத்தில் பிரேம் குமார் கைதாகி உள்ளதாக லக்னோ போலீசார் கூறி உள்ளனர். மோசடியில் அவருக்கு துணையாக இருந்த அவரது மைத்துனரும், பீஹார் தலைமைச் செயலக ஊழியருமான ரித்தேஷ் குமார் என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கணக்கில் காட்டாத ரூ.200 கோடி சிக்கியது சிமென்ட் நிறுவனம்
புதுடில்லி:கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், அந்த குழுமம் கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 24 இடங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில் அந்த சோதனை குறித்த விபரங்களை, சி.பி.டி.டி., எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில்,சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வரும் ஒரு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அசாம், மேகாலயா மற்றும் டில்லியில் அந்த குழுமத்திற்கு சொந்தமாக உள்ள இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
அதில், இந்த குழுமம் கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுமத்தின் கீழ் இயங்கும் சில நிறுவனங்கள், ஊழியர்களின் பெயர்களில் இயங்கி வருவதும்; அந்த ஊழியர்கள், அதிக அளவில் சம்பாதித்து வருவதும் கண்டறியப்பட்டது.
இதை மறைக்க, பல முறைகேடுகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களும், ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 1.30 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் கைதான டாக்டர்கள் பணி நீக்கம்
சென்னை:பாலியல் புகாரில் கைதான ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர், கொரோனா பணியின் போது, தனிமைப்படுத்துதலுக்காக, தி.நகரில் உள்ள, தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் வெற்றிசெல்வன், 35, பெண் டாக்டரை பலாத்காரம் செய்துள்ளார்.
அதேபோல, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு பெண் டாக்டரும், அதே ஓட்டலில் தனிமையில் இருந்தபோது, டாக்டர் மோகன்ராஜ், 28, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, இரண்டு பெண் டாக்டர்களும் அளித்த புகார் அடிப்படையில், வெற்றிசெல்வன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இரண்டு டாக்டர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு கூறுகையில், ''பாலியல் புகாரில் கைதான இரண்டு டாக்டர்களும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ''புகாரில் அவர்கள் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளோம்,'' என்றார்.'இரண்டு டாக்டர்களும், ஐந்தாண்டுகளுக்கு டாக்டர் பணி மேற்கொள்ள தடை விதிக்கப்படலாம்' என்றும் தமிழக மருத்துவ கவுன்சில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
என்கவுன்டரில்' இறந்தவர்கள் உடல்கள் மீண்டும் அடக்கம்
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், 'என்கவுன்டரில்' கொல்லப்பட்ட பொதுமக்கள் இரண்டு பேரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு, குடும்பத்தினர் முன்னிலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரின் ஹைதர்போரா பகுதியில் சமீபத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அல்தாப் பட் என்ற வியாபாரியும், முதாசிர் குல் என்ற பல் டாக்டரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.அவர்கள் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் உடல்கள் புதைக்கப்பட்டன. இதனால் அவர்களது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து புதைக்கப்பட்ட அவர்களின் உடல்களை நேற்று போலீசார் தோண்டி எடுத்தனர். பின், ஸ்ரீநகரின் பர்சுல்லா மற்றும் பீர்பர்க் பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE