திருட்டு கும்பல் கைது
பெங்களூரின் பல்வேறு இடங்களில், வீடு புகுந்து திருடிய சோமசேகர் என்ற சோமா, 21, பிரஜ்வல், 21, இவர்களிடம் திருட்டு பொருட்களை வாங்கிய மாதேஷ், 23, ஆகியோரை சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.12 கிலோ எடையுள்ள தங்கநகைகள் மீட்கப்பட்டது.
11 பைக்குகள் மீட்பு
பெங்களூரின் பல இடங்களில், பைக்குகளின் பூட்டை உடைத்து திருடிய ரோஹித் ரெட்டி, ரேவந்த் ஆகியோரை, காமாட்சிபாளையா போலீசார் கைது செய்தனர். 5.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலை விபத்தில் தம்பதி பலி
கலபுரகியின், கூடி கிராஸ் அருகில் நேற்று மதியம் சிவசங்கரப்பா, 69, குண்டம்மா, 50, தம்பதியர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த பார்ச்சூனர் மோதியதில், தம்பதியர் உயிரிழந்தனர். கார் பல்டியடித்ததில், அதிலிருந்த யட்ராமியின், யலகோடா மடத்தின் குருலிங்க சுவாமிகளும், ஓட்டுனரும் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
மாடுகள் கடத்தல்
ஷிவமொகா ஹொசநகரின், பெசிகே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ஜெயநகர் கிராமத்தில், நேற்று முன் தினம் மர்மநபர்கள், வாகனத்தில் மாடுகளை கடத்தி சென்றனர். கிராமத்தினர் தடுக்க முயற்சித்தும், ஆயுதங்களை காண்பித்து, கடத்தல்காரர்கள் தப்பியோடினர். தகவலறிந்த தாசில்தாரும், வாகனத்தை விரட்டி சென்றும் பயனில்லை.
அதிகாரி தற்கொலை
தார்வாடின் கலகடகி பஸ் நிலையத்தில், பணியாற்றியவர் சுபாஷ் புலபுலே, 58. தற்போது மாணவர்களின் பாஸ்கள், கணினி மூலம் வழங்கப்படுகிறது. இவர் கணினி பயிற்சி பெறாததால், எப்படி பாஸ் வழங்குவது என்பது தெரியவில்லை. பணியாற்ற முடியாமல் அவதிப்பட்ட அவர், நேற்று முன் தினம், பாஸ் வழங்கும் மையத்திலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டில் சாராயம் தயாரித்தவர் கைது
யாத்கிர் யரடோலாவின், முத்னாளா கிராமத்தில், வீடொன்றில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்று கலால்துறை அதிகாரிகள் சோதனையிட்டு, ஐந்து லிட்டர் சாராயம், 20 லிட்டர் வெல்லம் கலவையை கைப்பற்றினர். காசி நாத் சொன்யா ராத்தோட் என்பவரை கைது செய்தனர்.
காதலியை கொன்று காதலன் தற்கொலை
பெங்களூரு: பெங்களூரு ஜிகனி நிசர்கா காலனியை சேர்ந்தவர் சிஞ்சனா, 18. கல்லுாரி மாணவியான இவர் கிஷோர் என்பவரை காதலித்து வந்தார். நேற்று சிஞ்சனா வீட்டுக்கு அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் கிஷோர் குமார் சென்றிருந்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சிஞ்சனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த கிஷோர் குமார் அங்கேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE