தமிழ்நாடு

தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மக்களை வெளியேற்றும் பணி மந்தம்! பொது மக்கள் அவதி

Added : நவ 20, 2021
Share
Advertisement
கடலுார் : பெண்ணையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றாததால் தண்ணீர் கடலுக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. மீட்பு பணிகள் மந்தமாக நடந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மக்களை வெளியேற்றும் பணி மந்தம்! பொது மக்கள் அவதி

கடலுார் : பெண்ணையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றாததால் தண்ணீர் கடலுக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. மீட்பு பணிகள் மந்தமாக நடந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின், நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை, புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதனால் கடலோரப் பகுதியாக உள்ள கடலுார் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 18 ம் தேதி கடலுார் மாவட்டத்தில் சராசரியாக 36.24 மி.மீ., மழை பெய்தது.

நேற்று கடலுாரில் மட்டும் 14.2 செ.மீ., பதிவானது. இதேப் போல உள் மாவட்டங்களில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.ஏற்கனவே தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா, பரவனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணையில் இருந்து 51 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சாத்தனுார் அணையில் ஷட்டர் பழுது ஏற்பட்டுள்ளதால் நேராக திருக்கோவிலுார் அணைக்கட்டிற்கு வந்தது. அங்கிருந்து நேற்று காலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத்துடன் விழுப்புரம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், சாவடி வழியாக வரும் போது, கூடுதல் மழைநீர் சேர்ந்து 1.5 லட்சம் கனஅடி தண்ணீராக பெருகியது.


அதிகாரிகள் அலட்சியம்


தென்பெண்ணையாற்றில் கருவேல மரங்கள் அகற்றப்படாமலேயே இருந்தன. இதனால் திடீரென திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலுக்குள் உள்வாங்கவில்லை. அதனால் சுற்றியுள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, தாழங்குடா, சுபா உப்பலவாடி, மூர்த்திக்குப்பம், குண்டுசாலை, நடேசன் நகர், திடீர்குப்பம், கோண்டூர், வெளிச்செம்மண்டலம், அழகியநத்தம், இரண்டாயிரம் விளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. அதனால் பல கிராமங்களில் சாலை துண்டிக்கப்பட்டு தனித்தீவானது.

கிராமங்களில் நெற் பயிர்கள், வாழை, கத்தரி தண்ணீரில் மூழ்கின. வெள்ள அபாயம் குறித்து கரையோர கிராமங்களில் முன்கூட்டியே தண்டோரா மூலமாக தெரிவிக்கவில்லை. இதனால் . திடீர் வெள்ளம் வந்ததால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனர்.


முகத்துவாரம் திறப்பு


பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சுபாஉப்பலவாடி-தாழங்குடா இடையே உள்ள முகத்துவாரம் வழியாக கடந்த 10 நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. தற்போது கூடுதலாக வந்த தண்ணீரை முகத்துவாரம் உள்வாங்கவில்லை. அதனால் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் புதுச்சேரி மாநிலம் புதுக்குப்பம் அருகே முகத்துவாரம் பகுதியை திறந்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


கடலுார் மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறுகையில், கன மழையால் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பொது மக்களை பாதுகாக்க 3 கிராமங்களுக்கு ஒரு துணை கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதித்த மக்களை தங்க வைக்க கடலுாரில் 16 திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது மழையில்லாததால திருக்கோவிலுாரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தண்ணீர் வடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X