இந்தியா

புதுச்சேரி ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்! கரையோர கிராமங்கள் தத்தளிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தொடர் மழை காரணமாக புதுச்சேரி சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோர கிராமங்கள் தத்தளிக்கின்றன. மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.புதுச்சேரியில் இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்ததால், கடந்த மாத இறுதியிலேயே ஆண்டின் மொத்த மழை அளவான 130 செ.மீ., கடந்தது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு
புதுச்சேரி ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்! கரையோர கிராமங்கள் தத்தளிப்பு

புதுச்சேரி : தொடர் மழை காரணமாக புதுச்சேரி சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோர கிராமங்கள் தத்தளிக்கின்றன. மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

புதுச்சேரியில் இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்ததால், கடந்த மாத இறுதியிலேயே ஆண்டின் மொத்த மழை அளவான 130 செ.மீ., கடந்தது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 18.8 செ.மீ., மழை கொட்டியதால், புதுச்சேரியின் பெரும் பகுதி வெள்ளக்காடானது.


வீடூர் அணை திறப்பு


இதேபோன்று தமிழக பகுதியிலும் கனமழை கொட்டியதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பின. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை, மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் கடந்த 7ம் தேதி 456.186 மில்லியன் கன அடி எட்டியது.அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 529 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியதால், அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணையின் 9 ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது

.சற்று நேரத்தில் அது 35 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கு கீழ் பகுதியில் வராக நதி மற்றும் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வழிந்த நீரும் சேர்ந்து சங்கராபரணி ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, சுத்துகேணி, செல்லிப்பட்டு, ஆரியப்பாளையம், கோட்டைமேடு, கணுவாப்பேட்டை, வில்லியனுார், உறுவையாறு, திருக்காஞ்சி, நோணாங்குப்பம், இடையார்பாளையம் என்.ஆர். நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆற்றங்கரையை ஒட்டியிருந்த 600க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள், மரங்கள், வைக்கோல் போர், குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.


பெண்ணையாற்றில் வெள்ளம்:


திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 51 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதனுடன், அந்தந்த பகுதிகளில் பெய்த மழை நீரும் சேர்ந்ததில், திருக்கோவிலுார் அணைக்கட்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து, தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால், புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம், சித்தேரி அணைக்கட்டு, கொம்மந்தான்மேடு தடுப்பணை, மணமேடு தடுப்பணைகள் மூழ்கி சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.

கரைக்கு மேலாக தண்ணீர் சென்று கரை ஓரங்களில் உள்ள கிராமங்களான கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளஞ்சந்தை, பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.இதனை அறிந்த அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினருடன் விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கிய மக்களை அவர்களது உடமைகளுடன் ரப்பர் படகுகள் உதவியுடன் மீட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.


போக்குவரத்து துண்டிப்பு


சங்கரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வில்லியனுார் ஆரியப்பாளையம் பாலத்திற்கு மேல் சென்றது. இதனால், நேற்று காலை 10:30 மணி முதல் புதுச்சேரி- விழுப்புரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் விழுப்புரம் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வில்லியனுார், பத்துக்கண்ணு, செல்லிப்பட்டு, கண்டமங்கலம் வழியாக திருப்பிவிடப்பட்டது.


முதல்வர் ஆறுதல்


வெள்ளம் சூழ்ந்த வில்லியனுார், நோணாங்குப்பம், இடையார்பாளையம், பாகூர், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பார்வையிட்டனர். பின்னர் முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். முகாம்களில் தங்கியவர்களுக்கு உணவு வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


அதிகாரிகள் கண்காணிப்பு


சங்கராபரணி மற்றும் தென்பெண்ணையாறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இரவு நேரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகமானால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆற்றின் வெள்ளப் பெருக்கை கண்காணித்து வருகின்றனர்.


சேதமடையும் படுகை அணை


சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செட்டிப்பட்டு- திருவக்கரை, சுத்துக்கேணி-கைக்கிளப்பட்டு, செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள படுகை அணைகள் முழுவதுமாக மூழ்கி, பல அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது.இதற்கிடையே, பிரெஞ்சு காலத்தில் அமைக்கப்பட்ட செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணை சேதமடைந்த நிலையில், தற்போது நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் படுகையணை முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


பயிர்கள் சேதம்


சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் கரைகளை தாண்டி பாயும் தண்ணீர் அங்குள்ள விளை நிலங்களுக்குள் 100 மீட்டர் துாரத்திற்கு மேல் புகந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெல், மரவள்ளி, கருணை, சவுக்கை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றங்கரையோரம் இருந்த பனைமரம் உள்ளிட்ட சீமக்கருவேல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.


மின்சாரம் துண்டிப்பு


சங்கராபரணி ஆற்றில் கூனிச்சம்பட்டில் இருந்து மணலிப்பட்டிற்கு செல்லும் பழைய தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுந்த மின்கம்பம், வெள்ளத்தில் உடைந்து விழுந்தது. இதனால் மணலிப்பட்டு கிராமத்திற்கு மின் இணைப்பு தடைபட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X