தென்பெண்ணையாற்றில் கரைபுரளும் வெள்ளம் | Dinamalar

தமிழ்நாடு

தென்பெண்ணையாற்றில் கரைபுரளும் வெள்ளம்

Added : நவ 20, 2021
Share
கடலுார் : கடலுார் தென்பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் கரையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தண்ணீர் சூழ்ந்த நகர் பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்பெண்ணையாற்று நீர் பிடிப்பு பகுதிகளிள் தொடர் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை நிரம்பியது. இதனால், நேற்று
 தென்பெண்ணையாற்றில் கரைபுரளும் வெள்ளம்

கடலுார் : கடலுார் தென்பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் கரையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தண்ணீர் சூழ்ந்த நகர் பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்பெண்ணையாற்று நீர் பிடிப்பு பகுதிகளிள் தொடர் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை நிரம்பியது. இதனால், நேற்று காலை திடீரென 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அத்துடன் நேற்று முன் தினம் பெய்த கனமழையால், தென்பெண்ணையாற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது. கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, சாவடி, ஆல்பேட்டை தென்பெண்ணை ஆறு வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தாழங்குடா கிராமம் அருகே கடலில் கலந்தது. ஒரு வாரத்திற்கு மேலாக 10 ஆயிரம் கன அடிக்கு குறைவாகவே தண்ணீர் சென்ற நிலையில் நேற்று திடீரென 10 மடங்கு தண்ணீர் கூடுதலாக வந்தது. இதனால், தாழங்குடா பகுதி முகத்துவாரம் வழியாக கடலுக்குள் தண்ணீர் உள்வாங்கவில்லை.

இப்பிரச்னையால், சுற்றியுள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங் குப்பம், செம்மண்டலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து தீவாக மாறின. இதையடுத்து பண்ருட்டியில் இருந்து கடலுார் வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் குழந்தைகளுடன் சாலையில் செய்வதறியாது தவித்தனர். கால்நடைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.தண்ணீர் புகுந்த பகுதிகளில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். கடலுாரில் ஆற்றங்கரை சாலையோர கஸ்டம்ஸ் சாலையில் பல இடங்களில் தண்ணீர் ஓடியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்பதால், தென்பெண்ணையாற்றுக்கரையோர மக்கள் கடும் அச்சமடைந்தனர். அரசு சார்பில் மீட்பு பணியை துரிதப்படுத்தி, மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.50 ஆண்டுகளுக்கு பிறகுகடலுார் தென்பெண்ணையாற்றில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்துள்ளதாக பாதித்த மக்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த தண்ணீர் ஓடிய நிலையில்,முன்னறிவிப்பும் இல்லாமல் கூடுதலாக தண்ணீர் திறந்ததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் உஷாராக இருந்திருப்போம் என, மக்கள் புலம்புகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரிய அளவில் மீட்பு நடவடிக்கையோ, தங்குமிடமோ, உணவோ ஏற்பாடு செய்யாததால் மக்கள் தவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X