பொது செய்தி

தமிழ்நாடு

கடலுக்கு பாய்ந்தது செம்பரம்பாக்கம் உபரி நீர்; கோடை காலத்தில் உதவும் மழை நீர் வீணடிப்பு

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, நடப்பாண்டில் இதுவரை, 900 கோடி லிட்டர் நீர் வீணாக கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரை, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் சேமித்திருந்தால், கோடை காலத்தில் சென்னைக்கு பயன்பட்டிருக்கும். இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டும், புதிய கால்வாய் கட்டும் திட்டத்தை அரசு இன்னும்
சிக்கராயபுரம், கல்குவாரி, சுணக்கம், கோடை காலம், செம்பரம்பாக்கம், உபரி நீர், வீணடிப்பு, மழைநீர், கடல்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, நடப்பாண்டில் இதுவரை, 900 கோடி லிட்டர் நீர் வீணாக கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரை, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் சேமித்திருந்தால், கோடை காலத்தில் சென்னைக்கு பயன்பட்டிருக்கும். இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டும், புதிய கால்வாய் கட்டும் திட்டத்தை அரசு இன்னும் செயல்படுத்தாததால், அரிய பொக்கிஷமான மழை நீர் வீணாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், 70 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி இருந்தன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், நவம்பர் துவக்கத்திலேயே, குடிநீர் ஏரிகளில் இருந்து உபரிநீர் கடலுக்கு திறக்கப்பட்டுள்ளது.


சுத்திகரிப்பு


இதில், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில், சீரான உபரிநீர் திறப்பு தொடர்கிறது. இந்த வகையில், 500 கனஅடி முதல், 3,500 கன அடி வரை, ஏரியில் நீர்வரத்துக்கு ஏற்ப, உபரிநீர் திறந்து விடப்படுகிறது. நடப்பாண்டில், இதுவரை 900 கோடி லிட்டர் உபரி நீர், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வீணாக கடலில் கலந்துள்ளது.இந்த நீரை, ஏரிக்கு அருகே உள்ள சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் சேமித்திருந்தால், கோடை காலத்தில், சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றும், அரசு அதற்காக திட்டமிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கட்டமைப்பு பணிகளை செய்யவில்லை என்றும் நீர்வள நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, நீர்வள நிபுணர்கள் கூறியதாவது: குன்றத்துாரை அடுத்த சிக்கராயபுரத்தில், வண்டலுார்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டி, 32 ஏக்கர் பரப்பளவில், 23 கல்குட்டைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், 400 - 500 அடி ஆழம் உடையவை. பல ஆண்டுகளாக பெய்த மழையில், இந்த குட்டைகளில் நீர் நிரம்பி இருந்தன. கடந்த 2017ல் பருவமழை பொய்த்ததால், சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டது. குடிநீர் ஏரிகளும் வறண்ட நிலையில், இந்த கல்குவாரி குட்டைகளில் தேங்கியிருந்த நீரை சுத்திகரித்து, சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தது, தமிழக அரசு. இதற்காக 13.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, கல்குவாரி குட்டைகளில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இங்கு 5.3 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்க வசதி உள்ளது.


வேதனை


ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தி,கல்குவாரி குட்டைகளில் இருந்த நீர் 'பம்ப்' செய்யப்பட்டு, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, சென்னைக்கு வினியோகமானது. இது ஒரு நிரந்தர கட்டமைப்பு என்பதாலும், கல்குவாரி குட்டைகளில், 1 டி.எம்.சி.,க்கும் மேல் நீரை தேக்க முடியும் என்பதாலும், மழைக்காலத்தில் வீணாகும் நீரை குட்டையில் சேமித்து, வறட்சி காலத்தில் பயன்படுத்த அரசு திட்டமிட்டது. இதன் வாயிலாக, பருவமழை கூடுதலாக கிடைத்தால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றின் வழியாக கடலில் வீணாகும் நீரை, கால்வாயில் கொண்டு சென்று, குட்டையில் சேமிக்கவும் வழி கிடைக்கும்; செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரால் சென்னைக்கு ஏற்படும் வெள்ள அபாயத்தையும் தடுக்க முடியும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக, முன்னாள் தலைமை செயலர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், நேரடியாக கள ஆய்வு செய்து 32 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், மழைநீர் வீணாவது இந்த ஆண்டும் தொடர்வது வேதனை அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சிக்கராயபுரம் கல்குட்டைகளில் பல ஆண்டுகளாக தேங்கியிருந்த நீர், 2018ல் சென்னை மக்களின் தாகம் தணித்தது.அப்போது முதல், கல்குட்டைகளுக்கு நீர்வரத்து இல்லாததால், வறண்ட நிலையிலேயே இருந்தன. தற்போது வரை, மழைநீர் வரத்து வாயிலாக, இந்த குட்டைகளில் 50 அடி ஆழத்திற்கு நீர் தேங்கி உள்ளது. ஆனால், குட்டைகள் ஒவ்வொன்றும், 400 அடி வரை ஆழம் உடையவை என்பதால், கால்வாய் திட்டம் சாத்தியப்படும் வரை, இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து மழைநீர் வரத்து கிடைத்தாலும், குட்டைகள் முழுமையாக நிரம்பாது.


latest tamil news
கால்வாயில் தடுப்பணை வருமா?


செம்பரம்பாக்கம் உபரி நீர் கால்வாய், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார்- - மீஞ்சூர் வெளிட்ட சாலைகளை கடந்து, வழுதலம்பேடு வழியாக திருநீர்மலை அருகே, அடையாறு ஆற்றில் சேர்கிறது. ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், இதன் வழியாக செல்லும். இக்கால்வாயில், வழுதலம்பேடு அருகே தடுப்பணை கட்டினால், பெரிய அளவில் தண்ணீரை சேமிக்க முடியும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கோடையில் வழுதலம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்னை ஏற்படாது. இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திட்ட அறிக்கை சொல்வது என்ன?


குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செம்பரம்பாக்கம் உபரி நீர் கால்வாய் கடக்கும் இடத்தில், 3.5 அடி உயரத்திற்கு, 'பெட் டேம்' எனப்படும், கரை அணை ஒன்று கட்டப்படும். அங்கிருந்து, குன்றத்துார் சாலை மற்றும் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம், 2 கி.மீ., துாரத்திற்கு, 18 அடி அகலம், 7 அடி உயரம் உடைய மூடு கால்வாய் கட்டி, சிக்கராயபுரம் கல்குட்டையுடன் இணைக்கப்படும். மூடு கால்வாய் வழியாக, வினாடிக்கு 500 கன அடி நீர் செல்லும் என்பதால், 10 நாட்களில் அனைத்து கல்குட்டைகளும் நிரம்பிவிடும். அந்த வகையில், 1 டி.எம்.சி., தண்ணீர் வரை குட்டைகளில் தேக்க முடியும். சிக்கராயபுரத்தில் ஏற்கனவே சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ளதால், விரைவாக சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு உடனுக்குடன் தண்ணீர் எடுக்கலாம் என்பதே திட்ட அறிக்கையின் முழு விபரம் என்கின்றனர், அதிகாரிகள்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-நவ-202104:20:58 IST Report Abuse
Bhaskaran அநியாயத்துக்கு தண்ணீர் லாரி காரர்களிடம் வாங்கிய பணத்துக்கு விசுவாசம் காட்டும் அதிகாரிகள் நீடூழி வாழ்க
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
21-நவ-202103:16:48 IST Report Abuse
srinivasan That means stone quarries are to be dug note to store water. Good information to quarry' thieves.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
20-நவ-202122:23:05 IST Report Abuse
Soumya தண்ணிய தேக்கி வச்சா கட்டிங் கமிஷன் கரப்ஷன் எப்பிடி பாக்குறது பத்து வெறியாச்சே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X