திருப்பதி: ஆந்திராவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இது ஆந்திராவில் நிலை கொண்டதால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சித்தூரில் ஏராளமான ஆடு, மாடுகள் மக்களின் கண் முன்பே நீரில் அடித்துச் செல்லப் பட்டன.
கல்யாணி அணை நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் சிக்கியதால் அதில் தவித்த 4 பேரை காப்பாற்ற 6 பேர் சென்றனர். பிறகு அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு 10 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த மழைக்கு ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் காணொலி மூலம் உரையாடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பேசியபோது ஆந்திராவில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கினார். அப்போது ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE