காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பாலாற்றில், 1903ம் ஆண்டுக்கு பின் தற்போது, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் செல்வதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாலாற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை, தீயணைப்பு மீட்பு துறையும், மாவட்ட அதிகாரிகளும் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்லும் பாலாற்றில், ஒரு மாதமாகவே வெள்ள நீர் செல்கிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கியது முதல், அதிக அளவில் தண்ணீர் செல்வதால், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து, அதிகளவில் தண்ணீர் வருவதால், காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றுடன் செய்யாறு மற்றும் வேகவதி ஆறும் கலப்பதால், அப்பகுதியில் இன்னும் அதிகளவு தண்ணீர் செல்கிறது. மூன்று ஆறுகள் கலந்து செல்லும் போது, திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள எடையாத்துாரில் கிளியாறும் பாலாற்றுடன் கலப்பதால், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் கடலில் கலக்கிறது. கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு, 5 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறது.

இது போன்று பல டி.எம்.சி., கன அடி நீர் கடலில் கலப்பதற்கு, பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டியிருந்தால், மழை நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவு தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, இரு கரை தொட்டு தண்ணீர் செல்வதால், இரு கரையோரம் உள்ள மக்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்படுகிறது.
வாலாஜாபாதில் தரைப்பாலத்தை கடந்து தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பெரிய நத்தம், வாலாஜாபாத், வில்லிவலம் உள்ளிட்ட கிராம கரையோரங்களில் வசிப்போர், மாடு மேய்ச்சலுக்கு சென்றோரை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருடன், அதிகாரிகளும் படகில் சென்று மீட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வில்லிவலம், பெரிய நத்தம், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் சென்று அங்கிருந்த மக்களிடம் பேசினார்.
ஆடு, மாடுகளை விட்டுவர முடியாது எனக் கூறிய பூபாலன் - சாந்தகுமாரி தம்பதியிடம் பேசி அவர்களை மீட்டு வந்தார். நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். செவிலிமேடு பகுதியில், பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட பம்ப் ஆப்ரேட்டர் கருணாகரன், 54, என்பவரை, தீயணைப்பு, மீட்பு துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1903ல் வாலாஜாபேட்டை அணைக்கட்டிலிருந்து ஒரு லட்சம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. அதற்குபின் இந்த ஆண்டு தான், 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் பாலாற்றில் செல்கிறது. கடந்த 1903ல் அதிகபட்சமாக வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் சென்றது. அதைவிட சற்று குறைவாக, வினாடிக்கு 1.04 லட்சம் கன அடி நீர் தற்போது செல்கிறது. பாலாறு, செய்யாறு பிற கால்வாய்களில் இருந்து வரும் தண்ணீர் என, அனைத்து தண்ணீரும் சேர்ந்து திருமுக்கூடல் பகுதியில் செல்லும் நிலையில், வினாடிக்கு 1.26 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருத்தணி நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகர் அருகே உள்ள நந்தியாற்றின் தரைப்பாலம் மீது, 5 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. தாடூர் ஊராட்சி, தலையாறிதாங்கல் இ.என்.கே.சத்திய நகர் பகுதியில், ஏரியின் உபரி நீர் சாலையில் வெள்ளமாக ஓடுகிறது. ஆர்.கே.பேட்டை மற்றும் செல்லாத்துார் இடையேயுள்ள, பொதுப்பணித்துறை நிர்வகிக்கும் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. 1990க்கு பின் தற்போது தான் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதை, பட்டாசு வெடித்து அப்பகுதியினர் கொண்டாடினர்.
பொ.ப.துறைக்கு உத்தரவு

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் நீச்சல் மடுவு அணைக்கட்டு உள்ளது. இதன் கால்வாய் அருகே, திம்மாவரம் மஹாலட்சுமி நகர் உள்ளது. நீச்சல் மடுவில் இருந்து வெளியேறும் உபரி நீர், கால்வாய் வழியாக மஹாலட்சுமி நகரின் ஒரு தெருவில், வசிப்பிட பகுதியை சூழ்ந்துள்ளது. இதையறிந்த கலெக்டர் ராகுல்நாத் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கால்வாய் பகுதியில் வெள்ள தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இப்பகுதியில் வெள்ள நீர் புகாமல் இருக்க நிரந்தர தீர்வு காண, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், சாலைகள் அமைத்து தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
களத்தில் சுழலும் அதிகாரிகள்

வில்லிவலம் பகுதியில் பாலாறு அருகில் செல்லும் ஓடையில் சிக்கியவர்களை மீட்க சென்ற படகில், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரடியாக சென்று 10 பேரை மீட்டுள்ளார். அதே பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வமும், படகில் சென்று, நான்கு பேரை மீட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பாக மாவட்ட எஸ்.பி., சுதாகர் அனைத்து வெள்ள மீட்பு பணிகளிலும் உடன் பணியாற்றி வருகிறார்.
வாலாஜாபாத் அருகில் பாலாறு கரையோரம் வீட்டில் சிக்கியவர்களை, தாசில்தார் லோகநாதன் நேரடியாக கயிறு மூலம் சென்று முதியோரை மீட்டுள்ளார். இதுபோல், வெள்ளம் பாதித்த பகுதிகளில், அதிகாரிகளே நேரடியாக இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இடுப்பளவு தண்ணீரில் ஆய்வு

திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் - லட்சுமாபுரம் இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளம் நேற்று காலை திடீரென அதிகரித்து, அங்குள்ள ஈஸ்வரன் கோவில், பெட்ரோல் பங்க் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பரனீத் தாசில்தார் ஜெயராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடுப்பளவு தண்ணீரில் சென்று ஆய்வு செய்தனர். கோட்டாட்சியர் சத்யா உத்தரவின்படி, ஜே.சி.பி., இயந்திரத்தால் கால்வாய் மற்றும் தார்ச்சாலை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE