ஊட்டியிலே படப்பிடிப்பு என்றால்... அதில் ஒரு சீனாவது அல்லது ஒரு டூயட்டாவது, அங்குள்ள பொட்டானிக்கல் கார்டனில் எடுக்கப்படும் என்பது எழுதப்படாத விதி. நுாறு முறை படம் எடுத்தாலும், ஒவ்வொரு முறையும் ஒரு விதமாக ஈர்க்கும்...அதன் அழகு அப்படி!கோவையிலும் அதேபோல தாவரவியல் பூங்கா இருக்கிறது. கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவிலும் பார்வையாளர்களுக்கு அனுமதியுண்டு. அங்கு வாங்கப்படுவதைப் போல, இங்கும் பெரியவர்களுக்கு 50 ரூபாய், சிறியவர்களுக்கு 30 ரூபாய்தான் கட்டணம்.கோவையில் பொழுது போக்கு அம்சங்கள் இல்லையென்றுதான், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 500 கோடிகளைக் குளங்களில் கொட்டி பொலிவுபடுத்திக் கொண்டிருக்கிறது மாநகராட்சி. ஆனால் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகளைக் கொண்டுள்ள இந்த பூங்கா மேம்படுத்தப்படவே இல்லை. இப்போது அந்தப் பூங்காவிலும் ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அறிந்து, உள்ளே ஒரு ரவுண்டு அடித்தோம்...நுழைவாயில் துவங்கி, மொத்தமுள்ள 45 ஏக்கர் பரப்பளவிலும் அருமையான, அழகான மாற்றங்கள், உண்மையிலேயே காண்போரை அசரடிக்கின்றன. நுழைவாயில் பகுதியே தலைகீழாக மாறியிருக்கிறது. தரமான தார்ச்சாலை... அதன் இரு புறமும் ஒரே மாதிரியான அசோக மரங்களும், அதனிடையே வெளிநாட்டு அலங்கார மரங்களும் சீராக நடப்பட்டு, அழகாக அணிவகுக்கின்றன.
'பேசும்' அறிவிப்பு பலகைகள்!
உள்ளே நுழைவோருக்கு, பூங்காவின் பல பகுதிகளை விவரிக்கும் அறிவிப்புப் பலகை ஆச்சரியமூட்டுகிறது.சமநிலைத் தோட்டம், சமச்சீர் தோட்டம், சிறுவர் பூங்கா, நீரோட்டம், புதிர் பூங்கா, மூங்கில் தொகுப்பு, ஜப்பான் தோட்டம், பனைத் தொகுப்பு, பாறைத் தோட்டம், தீவுத் தோட்டம், நான்கு விதமான புல்வெளிகள் என்று இயற்கையும், செயற்கையுமாக எழிலுடன் மிரட்டுகிறதுபுல்வெளிகளுக்கு இடையில், கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, அனிச்சையாகவே நம் பாதங்களை அங்கே அழைத்துப் போகிறது. ஊட்டி பூங்காவில் இருப்பதைப் போலவே, புதிதாக ஒரு கண்ணாடிக் கூடமும் அமைக்கப்பட்டு, அதில் விதவிதமான கள்ளிச் செடிகள் உள்ளத்தைக்கொள்ளை கொள்கின்றன.அழகிய புல்வெளிகள், ஆங்காங்கே நடைபாதை, நீருற்றுகள், அமர்வதற்கு அழகழகான இருக்கைகள், செயற்கையாக அமைக்கப்பட்ட புல்மேடு என ரசித்து ரசித்துச் செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது பூங்கா.முதியோர் முழுமையாகப் பார்த்து ரசிக்க, பேட்டரி காரும் வலம் வருகிறது.ஸ்கேன் செய்தால் போதும்!குன்னுார் சிம்ஸ் பூங்காவைப் போலவே, இந்த பூங்காவிலும் திருவோட்டு மரம், நாகலிங்க மரம் என அரிய வகை மரங்கள் இருக்கின்றன. பல மரங்களில் 'க்யூ ஆர்' கோடு கொண்ட ஒரு பலகை கட்டப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் அந்த மரத்தின் பெயர், தாவரவியல் பெயர், பூர்வீகம், தன்மை, சிறப்பு எல்லா விபரங்களும் அலைபேசித்திரையில் விரிகின்றன.முக்கியமான ஒரு விஷயம், எங்குமே மறைவதற்கென்று புதர்கள் எதுவுமே இல்லை. பளிச்சென்று இருக்கிறது பூங்கா. உள்ளே வந்தால் ஒவ்வொரு தோட்டத்தையும் பார்த்து ரசிக்கவே பல மணி நேரம் பத்தாது. குழந்தைகள் ரொம்பவே குஷியாகி விடுவார்கள்.இருட்ட ஆரம்பித்து விட்டால், ஓட வேண்டிய அவசியமில்லை என்கிற அளவிற்கு, பூங்கா முழுவதும் சோலார் விளக்குகள் ஜொலிக்கின்றன. இதே பூங்காவில் கேன்டீன் அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பது, அங்கு வரும் பார்வையாளர்களின் கருத்து. குடும்பத்தோடு பொழுதைக் கழிக்க மினிமம் இல்லை... மேக்ஸிமம் கியாரன்டி தருகிறது கோவை பொட்டானிக்கல் கார்டன்!
80 சதவீத பணிகள் ஓவர்!
வேளாண் பல்கலை துணை வேந்தர் குமார் கூறுகையில், ''இப்போது காலை 9 முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை, மூத்த குடிமக்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. முழுமையாக முடிந்ததும், கோவை மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கின்ற ஒரு பூங்காவாக இது மாறுமென்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE