பொது செய்தி

இந்தியா

துாய்மையான நகரமாக மீண்டும் இந்துார் தேர்வு

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:நாட்டில் துாய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தை இந்துார் பிடித்துள்ளது. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ்,மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.துாய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில்2016ம் ஆண்டு முதல்
 துாய்மையான நகரமாக மீண்டும் இந்துார் தேர்வு

புதுடில்லி:நாட்டில் துாய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தை இந்துார் பிடித்துள்ளது.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ்,மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.துாய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில்2016ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 2020 - 21ம் ஆண்டிற்கான துாய்மையான நகரங்கள் பட்டியலை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். மொத்தம் 4,320 நகரங்களில் 28 நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 4.2 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் மத்திய பிரதேசத்தின் இந்துார் நகரம், தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.


இரண்டு இடங்கள்


குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தை பிடித்த மஹாராஷ்டிராவின் நவி மும்பை, இம்முறை நான்காவது இடத்தை பிடித்துள்ளது. புதுடில்லி ஐந்தாவது இடத்தையும், சத்தீஸ்கரின் அம்பிகாப்பூர் ஆறாவது இடத்தையும், ஆந்திராவின் திருப்பதி ஏழாவது இடத்தையும், மஹாராஷ்டிராவின் புனே எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உத்தர பிரதேசத்தின் நொய்டா ஒன்பதாவது இடத்தையும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் நகரங்களில் மஹாராஷ்டிராவின் விடா, லோனாவாலா, சஸ்வத் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. கங்கை நதியோர நகரங்கள் பட்டியலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி முதல் இடத்தையும், பீஹாரின் முங்கர், பாட்னா நகரங்கள் அடுத்த இரண்டு இடங்களையும் பிடித்து உள்ளன.


மக்கள் தொகை

நுாற்றுக்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ள மாநிலங்களில் ஜார்க்கண்ட்முதலிடத்தையும், ஹரியானா இரண்டாவது இடத்தையும், கோவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மாவட்டங்கள் அளவில் சூரத் முதலிடத்தையும், இந்துார் இரண்டாவது இடத்தையும், புதுடில்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.மேலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை என்ற அடிப்படையில் சென்னை மாநகராட்சி 43வது இடமும், கோவை 46வது இடமும், மதுரை 47வது இடமும் பெற்றுஉள்ளன. இதில், தமிழக அளவில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. டில்லி ஜனாதிபதி மாளிகையில்நடந்த நிகழ்ச்சியில் இந்த நகரங்களுக்கு விருதுகளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


தமிழகத்துக்கு 2 விருது

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி முயற்சிக்கான விருது வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சுகாதார அடையாள அட்டை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குப்பையை சிறந்த முறையில் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட இந்த விருதை, சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் டாக்டர் மனிஷ் எஸ்.நாரணவரே பெற்றுக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி, 25 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உடைய நகரங்களின் பிரிவில், தமிழகத்தின் தூய்மையான நகரங்களில் முதலிடமாகவும், தென் மாநிலங்களிலேயே இரண்டாவது துாய்மை நகரமாகவும் தேர்வானது.இதற்கான விருதை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியின் முந்தைய செயல் அலுவலர் குகன் மற்றும் தற்போதைய செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X