சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'அண்ணன் காட்டிய வழியம்மா' என அணி மாறிய கூட்டம்!

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
'அண்ணன் காட்டிய வழியம்மா' என அணி மாறிய கூட்டம்!''தி.மு.க., அரசு மீது மூணு முக்கிய புகார்களை வாசிக்க போறாளாம் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''யாரு, எப்பன்னு விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழகத்துல, ஆறு மாவட்டங்கள்ல பா.ஜ., அலுவலகங்களை திறக்கறதுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி திருப்பூர் வர்றார்

டீ கடை பெஞ்ச்


'அண்ணன் காட்டிய வழியம்மா' என அணி மாறிய கூட்டம்!''தி.மு.க., அரசு மீது மூணு முக்கிய புகார்களை வாசிக்க போறாளாம் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''யாரு, எப்பன்னு விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழகத்துல, ஆறு மாவட்டங்கள்ல பா.ஜ., அலுவலகங்களை திறக்கறதுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி திருப்பூர் வர்றார் ஓய்...

''அப்ப, 'தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல, அ.தி.மு.க., உடனான கூட்டணி தொடரும்'னு அறிவிக்க போறாராம்... முக்கியமா, தி.மு.க., அரசு மீது மூணு முக்கிய புகார்களை வெளியிட இருக்காராம்... இது, தமிழக அரசியல்ல பரபரப்பை ஏற்படுத்தும்னு பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''நுாலகத்துல படிக்கணும்... இவங்களோ அரசியல் பண்ணுதாவ வே...'' என, இஞ்சி டீயை குடித்தபடியே அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்துல நுாலக கட்டடம் பழுதடைஞ்சு இருக்கு வே... தி.மு.க.,வைச் சேர்ந்த கே.வி.சீனிவாசன், அந்த கட்டடத்தை புனரமைச்சு, 'டிஜிட்டல்' நுாலகமா மாத்த நிதியுதவி பண்றதா, கலெக்டரிடம் மனு கொடுத்திருக்காரு வே...

''இது தெரிஞ்சதும், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், 'காவேரிப்பட்டணம் நுாலகத்துல இருக்குற புத்தகம் எல்லாம் மழையில நனைஞ்சுருக்கு... என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க'ன்னு கலெக்டரிடம் கேட்டுருக்காரு வே...

''மேலும் அன்னைக்கே, டி.இ.ஓ.,விடம் பேசி காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நுாலகத்தை மாத்திட்டாரு... 10 வருஷமா கண்டுக்காத நுாலகத்தை திடீர்னு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கையில எடுத்ததுக்கு காரணம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தானாம்... 'என்னமா நடிக்காவ'ன்னு மக்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

''ம்... பாவம், அவரும் என்ன தான் செய்வாரு பா...'' என, முணுமுணுத்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''மதுரையில, 'அண்ணனா' கொடி கட்டி பறந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு, 'லெப்ட், ரைட்டு'ன்னு கூடவே இருந்த எல்லாரும், முதல்வர் ஸ்டாலின் பக்கம் தாவ தயாராகிட்டாங்க... இதுக்கு பின்னணியில உருக்கமான கதை ஒண்ணு இருக்குது பா...

''அவருக்கு வலதுகரமா இருந்த 'அரசன்' உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்கள் எல்லாரும், 'இப்படியே இருந்தா எங்க அரசியல் வாழ்வு என்னாகும்ணே'னு கேட்டிருக்காங்க பா...

''மனசொடிஞ்சு இருக்கும் அண்ணனும், 'விருப்பம் இருக்குறவங்க, முதல்வர் பக்கம் போயிடுங்க... என் தம்பி தானே அவரு'னு விரக்தியா சொல்லிட்டாராம் பா...

''இதுக்காகவே காத்திருந்த மாதிரி, சமீபத்துல குமரிக்கு போயிட்டு கார்ல வந்த முதல்வர் ஸ்டாலினை, மதுரை விமான நிலையம் பக்கத்துல இருக்குற கருப்பசாமி கோவில் பகுதியில, அண்ணனோட ஆதரவாளர்கள் சந்திச்சிருக்காங்க...

''கொஞ்சம் யோசனை பண்ணிய முதல்வரும், 'சரி, சேர்ந்து பணியாற்றுங்க'னு பச்சைக்கொடி காட்டிட்டாரு... இதை போய், அண்ணனிடம் சொல்லவும், அவர் முகத்துல எந்த சலனமும் இல்லையாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

*******************


ரேஷன் வாங்க 8 கி.மீ., அலையும் மலை கிராம மக்கள்!அதிகாலை குளிருக்கு இதமாக, நாயர் தந்த ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''அதிகாரிக்கு எதிரா, போர்க்கொடி துாக்கியிருக்காவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி, தொழிலாளர்கள் கோரிக்கை சம்பந்தமா, மாநகராட்சி உயர் அதிகாரியை சந்திக்க போயிருக்காரு... அவரை பார்க்காத உயர் அதிகாரி, காக்க வைச்சு அலைக்கழிச்சிருக்காரு வே...

''இந்த மன உளைச்சல்ல இருந்த தொழிற்சங்க நிர்வாகி, திடீர்னு இறந்துட்டாரு... ஏற்கனவே, மாநகராட்சி துாய்மை பணியாளர் ஒருத்தர், மின்சாரம் தாக்கி ஒரு கையை இழந்துட்டாரு வே...

''அவருக்கு எந்த நிவாரணமும் தரலை... இதனால அதிகாரியை மாத்தணும்னு, துாய்மை பணியாளர்கள் எல்லாம் குரல் எழுப்பிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கார்த்திகேயன் வரார்... அவருக்கும் சேர்த்து டீ போடும் நாயரே...'' என்ற குப்பண்ணா, ''தகவல் சட்டத்துல மழுப்பலா பதில் தந்திருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.

''எந்த துறையிலங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டத்துல, தமிழக அரசு தோட்ட கழகமான, 'டான்டீ' செயல்படறதோல்லியோ... தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் மற்றும் குடியிருப்புகளை சீரமைக்க, வருஷா வருஷம் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கறா ஓய்...

''இந்த நிதியில வளர்ச்சி பணிகள், ஓய்வு விடுதிகள்ல சீரமைப்பு பணிகள் செய்ததா அதிகாரிகள் கணக்கு காட்டறா... இது சம்பந்தமா, தகவல் உரிமை சட்டத்துல சமீபத்துல தொழிலாளர்கள் சார்புல ஒருத்தர் பல கேள்விகளை கேட்டிருந்தார் ஓய்...

''அதுக்கு, 'ஒட்டுமொத்த நிதியும் அரசே ஒதுக்கீடு பண்றிடறதால, விபரங்களை தர வாய்ப்பு இல்லை'ன்னு பூசினாப்புல பதில் தந்திருக்கா... முழு செலவு விபரங்களை கொடுத்தா மாட்டிப்போம்கறதால, இப்படி மழுப்பலா பதில் தந்திருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பொதுமக்களை 8 கி.மீ., அலைய விடுறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், குரால்நத்தம் ஊராட்சியில ஜருகுமலை இருக்கு... இங்க இருக்கிற, 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள், பொருட்கள் வாங்க, 8 கி.மீ., தள்ளி மலை அடிவாரத்துல இருக்கிற சன்னியாசிகுண்டு வரணும் பா...

''போன மாசம், ஜருகுமலையில வாடகை கட்டடத்துல புது ரேஷன் கடையை, வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜமுத்து திறந்து வச்சாரு... அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஜருகுமலைக்கு எடுத்துட்டு வந்தாங்க பா...

''ஆனா, திறந்த கையோட அந்த பொருட்களை மறுபடியும் சன்னியாசிகுண்டுக்கே எடுத்துட்டு போயிட்டாங்க... காரணம் கேட்டப்ப, 'ஜருகுமலையில சிக்னல் இல்லை... பயோ மெட்ரிக் மிஷின்ல கைரேகை பதிய முடியலை'ன்னு சொல்லியிருக்காங்க பா...

''எம்.எல்.ஏ., தரப்போ, 'பழைய முறைப்படி கையால ரசீது போட்டு பொருட்களை குடுங்க'ன்னு சொன்னாலும், ரேஷன் ஊழியர்கள் கேட்க மாட்டேங்கிறாங்க... இதுல, ஆளுங்கட்சியினர் தலையீடு இருக்குன்னு, அ.தி.மு.க.,வினர் சந்தேகப்படுறாங்க... இவங்க அரசியல்ல, மலை கிராம மக்கள் 8 கி.மீ., அலைஞ்சு, ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டியிருக்குது பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-நவ-202110:12:43 IST Report Abuse
R.RAMACHANDRAN ரேஷன் கடை ஊழியர்கள் கொத்தடிமைகளாக உள்ளதால் அதிகார வர்கம் சொல்வதை கேற்க வேண்டும்.பழைய முறையில் பொருட்களை வழங்க அதிகார வர்கம் தடையாக உள்ளது. பொருட்களை வாங்க முடியாதவர்கள் வேறு ORU கார்டுதாரருக்கு அதிகாரம் அளித்து பெற படிவம் வெளியிட்டுள்ளனர் இனிய தளத்தில் அதனை அதிகார வர்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X