நல்ல தரமான படங்களை அளித்து, சமூகத்தை சீர்படுத்திய எத்தனையோ நட்சத்திரங்கள் உருவாக்கிய தமிழ் சினிமா துறை, இப்போது சில சுயநல பேர்வழிகளிடம் சிக்கியுள்ளது.
ஒரு காலத்தில் சமூக அக்கறை கொண்டவர்கள், தேச பக்தி கொண்டவர்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள், அசாத்தியமான திறமை கொண்டவர்கள் என நல்லவர்கள் பலர் திரை துறையில் நிரம்பி இருந்தனர். ஆனால் இன்று சமூகத்தைப் பற்றி கவலைப்படாத, நாட்டை பற்றி கவலைப்படாத, பணம் ஒன்றையே லட்சியமாகக் கொண்ட பேராசைக்காரர்களின் பிடியில் சிக்கி, சினிமா துறை விழி பிதுங்கி நிற்கிறது.
நகைச்சுவை, நவரசம்
திரையில் கதாநாயகனாக நடிப்பவர்கள் நிஜத்தில் வில்லனாக இருக்கின்றனர். இன்றைய திரை உலகில் சிலருக்கு கறுப்பு பணம், கறுப்பு சித்தாந்தம், கறுப்பு சிந்தனை இருக்கிறது. அதையும் தாண்டி சில தீய உள்நோக்கமும் பலருக்கு இருக்கிறது.
தமிழ் சினிமாவின் துவக்க காலம், பொற்காலமாக இருந்தது. சுதந்திரக் கனலை மக்கள் மத்தியில் உருவாக்கவும், விடுதலை உணர்வை ஊட்டவும் ஒரு கருவியாக இந்த துறை இருந்தது.சிவன், பார்வதி, மகா விஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் உள்ளிட்ட கடவுள்களையும், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அவ்வையார் உள்ளிட்ட ஆன்மிக அடிகளார்களையும் நம் கண் முன் கொண்டு வந்தது. அதுபோல, கர்ணன், ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சரித்திர புருஷர்களையும், நம் கண்முன் உலாவ விட்டது இந்த தமிழ் சினிமா தான்.
சமூக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அண்ணன் - தங்கை பாசம், கணவன் - மனைவி நேசம், அன்பை ஆதாரமாகக் கொண்ட காதல், சமூக அக்கறையை ஆதாரமாகக் கொண்ட மோதல், நகைச்சுவை என, நவரசங்களையும் விருந்தாக படைத்தது நம் தமிழ் சினிமா.
இதன்பின் மிகையான கற்பனைகளும், நகைச்சுவை, ஸ்டைல், வித்தியாசமான மாறுபட்ட தோற்றத்தில் நடிப்பது, ஆக்ரோஷம், அனல் பறக்கும் சண்டை, காதல், காமம், ஆபாசம் என்று மாறியது. காலப் போக்கில், 'கமர்ஷியல் பார்முலா' எனப்படும், படம் விற்கத் தேவையான அம்சங்களுடன் படங்கள் தயாரிக்கப்பட்டதும், வக்கிரங்கள் முளைவிட்டு வளரத் துவங்கி விட்டன.
இப்போது ஒரு படி மேலே போய், ஜாதி, மதம், இனம், மொழி என்று மக்கள் கூட்டத்தின் உணர்வுகளை உரசிப் பார்க்கும் வகையில் சினிமாக்கள் மாறி விட்டன.
மாபெரும் தலைவர்
இரண்டு சமூகங்களுக்கு இடையில் பகையை விதைத்து, பணத்தை அறுவடை செய்யும் வகையில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
சமீபத்தில் வந்துள்ள ஒரு படமும், அதன் காட்சி அமைப்புகளும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கொந்தளிக்க செய்திருக்கிறது. அந்த படத்தின் தலைப்பே, ஒரு மாபெரும் தலைவரை பின்பற்றுவோரை கவர்வதற்காக வைக்கப்பட்டது என்கின்றனர்.
'இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்டது' என்று அறிவித்து விட்டு, அதில் தவறு செய்யும் முக்கிய பாத்திரத்தின் பெயரையும், அவரின் ஜாதியையும், தந்திரமாக மறைத்து விட்டு, சம்பந்தமே இல்லாத ஒரு சமூகத்தை நுழைத்துள்ளனர்.
கருத்து சுதந்திரம்
மேலும், அந்த சமூகத்தின் ஒரு தலைவரின் பெயரை திணித்து, இரண்டு சமூகங்களையும் கொந்தளிக்க வைத்தது என்ன நீதி; திரைப்படம் என்றாலும் அதில் ஒரு தர்மம் வேண்டாமா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் கை வைத்தால் அது வன்முறைக்கு வழி வகுக்கும்.
கருத்து சுதந்திரம் என்பது, தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எந்த தடையும் இல்லாமல் பொதுவெளியில் எடுத்து சொல்வதற்காக தான். அங்கே நியாயத்தையும், உண்மையும் தான் சொல்ல வேண்டுமே தவிர, ஒருவர் செய்து விட்ட தவறை நியாயப்படுத்தி பேசுவது, கருத்து சுதந்திரம் என்ற எல்லைக்குள் வராது. ஒருவரை பாதுகாப்பதற்கே சுதந்திரம் இருக்கிறதே தவிர, யாரையும் அழிப்பதற்காக அல்ல.
திரைத் துறையில் இருப்பவர்களுக்கு சமூகநீதி பற்றியும், சமநீதி பற்றியும், சமூக அக்கறை பற்றியும், பேசுவதற்கு தார்மிக உரிமை இருக்கிறதா என்பதை அவர்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்.
ஏனெனில், படைப்பு சுதந்திரம், சினிமா சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என பேசும் இவர்கள், பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புகள், மதம் மாற்றும் கும்பலின் நயவஞ்சகம், அரசியல் தலைவர்களின் லஞ்சம் மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பற்றிய உண்மை கதைகளை படமெடுக்க முன்வருவரா?
அப்படி எடுக்க மாட்டார் கள். காரணம் பயம்.மற்ற துறைகளை பற்றி விமர்சிக்கும் இவர்கள், தங்கள் துறையில் உள்ள குறைகளை பற்றி எப்போதாவது திரும்பி பார்த்தது உண்டா; கவலைப்பட்டது உண்டா?
சில தயாரிப்பாளர்கள், சில நடிகர்கள், சில இயக்கு னர்கள், சில நடிகையர், சில இசையமைப்பாளர்கள் இவர்களை தவிர இந்தத் துறையில், எத்தனை பேர் வாழ்ந்தனர்; எத்தனை பேர் வீழ்ந்தனர்; எத்தனை பேர் எவ்வளவு பணத்தை இழந்துள்ளனர் என்பதை உண்மை கதைகளின் அடிப்படையில் விளக்குவரா?
சண்டை காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள், லைட் மேன்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றோரின் சம்பளம் என்ன; அவர்களின் வாழ்க்கைத் தரம் என்ன; அவர்களின் முதுமைப்பருவம் எவ்வளவு சிரமத்தில் இருக்கிறது என்பதை காட்டுவரா?
திரைத்துறைக்கு வரும் பெண்களின் நிலை என்ன; அவர்களின் சுய கவுரவத்திற்கான மதிப்பு என்ன; இதை பற்றி அவர்கள் சிந்தித்து தீர்வு காண முயற்சிகள் செய்து இருக்கின்றனரா? பேராசைக்காரர்களின் போலி கருத்து சுதந்திரத்திற்கு தடை போட வேண்டும். பெரும் பணத்திற்காக புகழ் பசிக்காக அப்பாவி ஏழை மக்களின் துயரங்களை விற்பனைப் பொருளாக மாற்ற அனுமதிக்கக்கூடாது.
வாடிக்கையாகி விட்டது
இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு துவக்கப் புள்ளியாக இருப்பது திரைப்படங்கள் தான். காதல் என்ற பெயரில் காமத்தை திணிப்பது; கலை என்ற பெயரில் வக்கிரங்களை திணிப்பது; பெண்களை ஆபாசமாக காட்டுவது...நான்கு சுவற்றுக்குள் நடப்பதை நாடு முழுதும் கொண்டு சேர்ப்பது; குழந்தைகளுக்கு கூட ஆபாச மற்றும் வக்கிர சிந்தனையை துாண்டும் வகையில் காட்சிகளை அமைப்பது சமீப கால சினிமா தயாரிப்பாளர்களின் வாடிக்கையாகி விட்டது.
படங்களில் இப்படி வியாபார தந்திரங்களை செய்துவிட்டு, அவற்றை எல்லாம் சரி என்று வாதிடுவது, கலை என்று நியாயப் படுத்துவது தடுக்கப்பட வேண்டும்.ஆசிரியர்களை கேலி பொருளாக சித்தரிக்கும் காட்சிகள்; பேராசிரியர்களை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கிண்டல் செய்வது; காதலிக்கவே கல்லுாரி வந்தவன் போல காட்சிகள் அமைப்பது காலம் காலமாக தமிழ் படங்கள் செய்யும் கோமாளித்தனங்கள்.
வேகமாக நடக்கவே திணறும், 70 வயது நடிகர் கையில் வீச்சரிவாளை கொடுத்து, இஷ்டத்திற்கு எதிரிகளை வெட்டி வீழ்த்துவது... இயந்திர துப்பாக்கியை துாக்கவே திராணியில்லாத கதாநாயகனிடம் அதை கொடுத்து, தீபாவளி பட்டாசு போல சுட வைப்பது எல்லாம், தமிழ் சினிமா காலம் காலமாக செய்து வரும் அபத்தங்கள்.
இரவு, பகல் பாராது உழைக்கும் போலீசாரை, லஞ்சம் வாங்குபவர்களாக காண்பிப்பது; அயோக்கியர்களாக சித்தரிப்பது; தொந்தி, தொப்பையுடன் அவர்களை காண்பிப்பது எல்லாம் இங்கு சாதாரணம். அதுபோல, அசுரத்தனம் கொண்ட வில்லனாக சாதாரண நபரை காண்பிப்பது; வில்லன் என்ற பெயரில் படுபயங்கரதனங்களை காண்பிப்பதும் இங்குசகஜம்.
மேலும், சமூக நீதி, சமூகத்தில் ஏற்றத்தாழ்வை போக்குவோம் என்று கூறும் சினிமா இயக்குனர்கள், சில குறிப்பிட்ட ஜாதியை மட்டும் பெரிய ஜாதியாக காண்பிப்பது, வறிய நிலையில் உள்ளவர்களை தாழ்ந்த ஜாதியினர் போல காட்டுவது போன்ற ஜெகஜால கில்லாடித் தனங்களை செய்து உள்ளனர்.
பிராமணர்களை இழிவுபடுத்துவது; வணிகர்களை ஏமாற்று பேர்வழிகளாக சித்தரிப்பது; பெண்களை ஆபாசமாக மட்டுமே சித்தரிப்பது; அரசு ஊழியர்களை அடாவடிகாரர்களாக காட்டுவது தமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்துள்ளது. இப்படி சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் விமர்சனம் செய்து, அவர்களின் மாண்பை குறைப்பது, இவர்களுக்கு வாடிக்கை.
வியாபாரம் அதிகரிக்கும்
ஆனால், இவர்களை யாராவது விமர்சித்தால் கருத்து சுதந்திரத்தை தடுக்கின்றனர் என்பர்.
இது எப்படி சரியாகும்?கருத்து சுதந்திரம் என்பது உங்களுக்கு மட்டும் தானா... மற்றவர்களுக்கு அது கிடையாதா? அவர்களைப் பொறுத்தவரை சர்ச்சைகள் வந்தால், படங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்; விளம்பரம் கிடைத்தால், எதிர்பார்ப்பு அதிகமாகும்; அது படத்தின் வியாபாரத்தை அதிகரிக்கும்; படம் வசூலை வாரி குவிக்கும் என்பது தான்.
இந்த உலகத்திலேயே அத்தியாவசிய தேவை இல்லாத ஒரு துறை உண்டு என்றால், அது திரைத்துறை மட்டும் தான். கலை ஆர்வம் கொண்ட சிலரின் பசிக்காக, ஒட்டுமொத்த சமூகமும் பலியாகி விடக்கூடாது.
முழு வெற்றி
பொழுதை கழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை, ஒரு மனிதனின் முழு நேரத்தையும் ஆக்கிரமித்து, அவனை உழைக்க விடாமல் தடுத்து நிறுத்துவதில் முழு வெற்றி கண்டிருக்கிறது. சினிமாவில் காட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. பணம் சம்பாதிப்பதற்கு லட்சம் வழிகள் இருக்கின்றன. கலை என்ற பெயரில் சமூக அமைதிக்கு உலை வைக்கும் படங்களுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் அத்தகைய படங்களை யாரும் எடுக்காத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், திரைத்துறை தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். சமூகத்தில் விஷத்தை விதைக்காத, சமூக அமைதியை குலைக்காத, கண்ணியமான கதைகளை தேர்வு செய்து, அவற்றை படமாக்க வேண்டும்.என் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் உரிமையும், கேள்வி கேட்கும் உரிமையும், எவருக்கும் கிடையாது என்று பேசுவோர், அடுத்தவர்கள் வாழ்க்கையை படம் எடுப்பது, அதை வியாபாரம் ஆக்குவது மட்டும் எப்படி சரியாகும்?
மனிதனை தெய்வமாக மாற்றும் பணியையே கலைத்துறை செய்ய வேண்டும். மனிதனை மிருகமாக்கும் பணிகளை எவர் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய செயல்.கலைத் துறை உள்ளிட்ட எந்த துறையும், சமூகத்திற்கு காவல் துறையாக இருக்க வேண்டுமேயன்றி கலகத்தை உருவாக்கும் துறையாக இருக்கக் கூடாது!
தொடர்புக்கு:
எஸ்.ஆர்.ரத்தினம்,
சமூக ஆர்வலர்
இ-மெயில்: bjprathnam@gmail.com
மொபைல்: 98408 82244