புதுடில்லி :மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தாலும், அதைத் தொடர்ந்து கையிலெடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. வரும், 29ல் துவங்கும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் விவசாயத் தொடர்பான புதிய கோரிக்கைகளை முன் வைத்து, சபையை முடக்குவதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன.
விவசாயம் தொடர்பாக கடந்தாண்டு மூன்று சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.டில்லி எல்லையில் கடந்த ஓர் ஆண்டாக அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறத் தயாராக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், 'எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்' என, அவர்கள் கூறியுள்ளனர்.கடந்த ஓர் ஆண்டாக நடந்து வரும் போராட்டங்களுக்கு, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தன.
முடிவு
இந்தப் பிரச்னை முன்வைத்து பார்லிமென்ட் கூட்டத் தொடரிலும் அமளியில் ஈடுபட்டு வந்தன.தற்போது சட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்தாலும் இந்தப் பிரச்னை இத்துடன் முடித்துக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் பல புதிய கோரிக்கைகளை முன்வைத்து, தங்கள் அரசியல் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளன.'எம்.எஸ்.பி.,யை உறுதி செய்ய வேண்டும்; மின்சார மசோதாவை கைவிட வேண்டும். 'விவசாய இடுபொருட்களுக்கான வரிகளை குறைக்க வேண்டும்; பெட்ரோல், டீசல்களுக்கான வரியை குறைக்க வேண்டும்' என, பல பிரச்னைகளை பார்லிமென்டின் குளிர்கால
கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.வரும் 29ல் துவங்கி அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடக்கும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் கடும் வாக்குவாதம், எதிர்ப்பு கோஷங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.
வலியுறுத்தல்
மேலும், மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைபடுத்த முயன்றது, எதிர்ப்பை அடுத்து விலக்கி கொண்டது தொடர்பாக, மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பவும் அவை திட்டமிட்டுள்ளன.அதனால் விவசாய மசோதாக்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததும், அதற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளன.
''பார்லி., யில் இன்னும் நிறைய வேலை உள்ளது,'' என, திரிணமுல் காங்.,கின் டெரக் ஓ பிரையன் குறிப்பிட்டார். ''சட்டங்களை திரும்பப் பெறுவதுடன், எம்.எஸ்.பி.,யை சட்ட உரிமையாக்க வேண்டும். ''போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிக்க வேண்டும்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு முதலில் இருந்து ஆதரவு அளித்து வரும் காங்.,கும், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்னையை எழுப்பும் என, கண்டிப்பாக எதிர்
பார்க்கலாம்.
''தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. ''செலவுடன், 50 சதவீத லாபத்தை சேர்த்து தருவதாக மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்,'' என, காங்., தற்காலிக தலைவர் சோனியா வலியுறுத்தி
உள்ளார்.'போராட்டம் இன்னும் முடியவில்லை. எம்.எஸ்.பி.,க்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்டவை கிடைக்கும் வரையில் போராட்டத்துக்கு ஆதரவு தொடரும்' என, விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காங்.,கின் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
''சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தலைவர்கள் பதவியை நீட்டிக்க மத்திய அரசு அவசர சட்டம் அமல்படுத்திஉள்ளது. ''விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மட்டும் ஏன் அவசர சட்டம் அமல்படுத்தவில்லை,'' என, காங்.,கின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
உறுதி
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும், விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.அடுத்த சில மாதங்களில் உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அரசியல் ரீதியில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக பிரச்னைகளை, குறிப்பாக விவசாய பிரச்னைகளை முன்வைத்து புயலை கிளப்ப, எதிர்க்கட்சிகள் உறுதியுடன் உள்ளன.
டிராக்டர் பேரணி நிச்சயம்
'குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் பார்லி.,யை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும்; இதில் ௫௦௦ விவசாயிகள் பங்கேற்பர்' என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகள் சமீபத்தில் அறிவித்தன.இதற்கிடையில் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியதாவது:மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.போராட்டத்தை நாங்கள் இன்னும் நிறுத்தவில்லை. பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி நடத்தும் முடிவையும் கைவிடவில்லை. இது குறித்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE