சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ள சேதங்களை பார்வையிட இன்று வருகிறது மத்திய குழு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு இன்று மதியம் சென்னை வருகிறது. குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்; வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் பேசுகின்றனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி,

சென்னை:தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு இன்று மதியம் சென்னை வருகிறது. குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்; வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் பேசுகின்றனர்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என, பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின; சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.
முதற்கட்டமாக தமிழக அரசு எடுத்த கணக்கெடுப்பில், 2,629.29 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சார்பில், எம்.பி., - டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்த சேத விபரங்கள் அடங்கிய மனுவை அளித்து, உடனடியாக 549.63 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.


குழுவில் யார் யார்?

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட, மத்திய குழுவை அனுப்புவதாக அமித் ஷா தெரிவித்தார். அதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில், நிதி மற்றும் செலவினங்களுக்கான அரசு ஆலோசகர் ஆர்.பி.கவுல், விவசாயத் துறை இயக்குனர் விஜய்ராஜ் மோகன், மத்திய நீர்வள கமிஷனின் சென்னை இயக்குனர் தங்கமணி. மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அதிகாரி ரனன்ஜெய் சிங், மின் துறை துணை இயக்குனர் பாவ்யா பாண்டே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வரபிரசாத் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று மதியம் சென்னை வருகின்றனர். இதுபற்றி, தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:முதல்வர் வேண்டுகோளை ஏற்று, வட கிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட, ஏழு பேர் இடம் பெற்ற மத்திய குழு இன்று மதியம் சென்னை வருகிறது.
இந்தக் குழு, நாளையும், நாளை மறுதினமும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, சேதங்களை பார்வையிட உள்ளது. குழு இரண்டு பிரிவாகப் பிரிந்து, நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; கன்னியாகுமரிக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன.
மறுநாள் 23ம் தேதி கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; வேலுார், ராணிப்பேட்டைக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன.ஒரு குழுவை, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி; மற்றொரு குழுவை, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் வழிநடத்தி செல்வர்.
மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாவட்ட கலெக்டர் குறிப்பெடுத்து, அங்கு குழுவை அழைத்து செல்ல அறிவுறுத்தி உள்ளோம். உண்மையில்பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று, சம்பந்தப்பட்ட விவசாயிகளை சந்திக்க வைக்க வேண்டும். விவசாய சங்கங்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு குழுவை சந்தித்து, அப்பகுதி சேதங்களை எடுத்துரைக்க வேண்டும்.
சேதங்களை பார்வையிட்ட பின், மத்திய குழு 24ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வரை சந்திக்க உள்ளது. மத்திய அரசிடம் முதல் கட்டமாக 2,629.29 கோடி ரூபாய் ஒதுக்குமாறும்; உடனடியாக அவசரமாக 549.63 கோடி ரூபாய் விடுவிக்கவும் கோரி உள்ளோம்.

தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலுார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில், புதிதாக சேத விபரங்கள் வந்தபடி உள்ளன.

முதல் அறிக்கை தயார் செய்த பின் தொடர்ந்து மழை பெய்வதாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். இதற்கு கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். முதலில் கேட்ட தொகையுடன், புதிய தொகையை சேர்த்து கேட்க உள்ளோம். இந்த தொகையை பெற, எங்களால் முடிந்த அளவு அழுத்தம் கொடுப்போம்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், பத்திரங்கள் தொலைந்திருந்தால், உடனடியாக வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். பாலாற்றில் பல ஆண்டுகள் கழித்து, மிகப்பெரிய வெள்ளத்தை சந்தித்துள்ளோம். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம்; இறப்பு குறைந்துள்ளது. கரையோரமிருந்த வீடுகள் இடிந்துள்ளன. வெள்ளம் ஊருக்குள் வந்தபோதும், பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X