ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகளை கண்டறிய சி.பி.ஐ., விசாரணை?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி' திட்ட முறைகேடுகளை கண்டறிய சி.பி.ஐ., விசாரணை?

Updated : நவ 21, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (31)
Share
தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், அ.தி.மு.க., 'மாஜி'க்கள் பலருக்கும் சிக்கல் வருகிறது. முதற்கட்டமாக, புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகள் குழுவை நியமித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
ஸ்மார்ட் சிட்டி, முறைகேடு,  சி.பி.ஐ., விசாரணை?

தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், அ.தி.மு.க., 'மாஜி'க்கள் பலருக்கும் சிக்கல் வருகிறது. முதற்கட்டமாக, புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகள் குழுவை நியமித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சென்னை, கோவை மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடுமாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநகராட்சிக்கும், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்கு இணையாக தமிழக அரசும் நிதி வழங்கி வருகிறது. திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பூங்கா அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் இம்மாதம் 6ம் தேதி இரவு கன மழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கியதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்த தி.நகர், மாம்பலம் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடக்காததே, இந்த பாதிப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.




முதல்வர் புகார்


சமீபத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் போட்டு, மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் வாங்கி, என்ன செய்தனர் என்றே தெரியவில்லை. பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. பணிகளை முறையாக செய்யாததால், சென்னை தத்தளிக்கிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், உள்ளாட்சி துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை; கமிஷன் மட்டும் வாங்கியிருப்பது நன்றாக தெரிகிறது. மழை நீரை வெளியேற்றும் பணிகள் முடிந்த பின், விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எங்கு தவறு நடந்தது என்று கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ, அவர்கள் தண்டிக்கப்படுவர். தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மீதும் நட
வடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் இந்த குற்றச்சாட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல்வரின் குற்றச்சாட்டை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மறுத்தார். சென்னையில் ஏற்பட்ட பாதிப்பை திசை திருப்ப, தங்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் கூறினார்.




விசாரணை குழு



இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் கூறிய குற்றச்சாட்டை, மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்த திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்தது. எனவே, முதல்வரின் புகார் குறித்து விசாரிக்க, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, தன் அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.இக்குழு விரைவில் தமிழகம் வந்து விசாரணை நடத்தி, அறிக்கை தர உள்ளது.

அந்த அறிக்கையில், முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தயாராக உள்ளார். அவர் நேர்மையானவர் என்பதால், முறைகேட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார் என, அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., புகாரை அடுத்து, மத்திய அரசு விசாரணை குழு அமைத்து, அதிரடி நடவடிக்கையில் இறங்குவது, அ.தி.மு.க., தலைமைக்கு மட்டுமின்றி, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X