இயல், இசை, நாடகம் என்ற முக்கலைக்குள், தொன்மை பேசும் பாரம்பரியத்தின் பங்களிப்பு அளப்பரியது.தொன்மையான ஒவ்வொரு கலையும், நம் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன என்பது, உலகறிந்த உண்மை; ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுர வேக வளர்ச்சி, அதில் இளைய சமுதாயம் சிக்குண்டதன் விளைவால், பாரம்பரியமும், கலாசாரமும், மெல்ல, மெல்ல தன் பெருமையை இழந்து வருகிறது.இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே இன்றைய நிலை; நிதர்சனம். அந்த கலைகளை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பு, மாணவ சமுதாயத்தினருக்கு அதிகம் உண்டு என்பதால் தான், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டம் சார்பில், நாட்டுப்புற கலை வடிவங்களை மீட்டெடுத்து, அதனை உயிர்ப்புடன் வைக்க, மாணவ சமுதாயத்தை தயார்படுத்தும் வகையில், 'கலாஉத்சவ்' என்ற பெயரில், ஆண்டுதோறும், மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தாண்டு நடந்த போட்டியில், அவிநாசியில் உள்ள கடைக்கோடி கிராமமான சின்னக்கானுார் அரசு மேல்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல் பாரதி, சேலத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் முத்திரை பதித்துள்ளார்.தொன்மையான கலை வடிவங்களை தயாரிக்கும் இப்போட்டியில், பொம்மலாட்ட கலை சொல்லும் பொம்மையை உருவாக்கிய இம்மாணவன், அதன் சிறப்புகளை உணர்த்தியுள்ளார். இவரது படைப்பு திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதோடு, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறது.மாணவன் கோகுல் பாரதி கூறுகையில், “சின்ன வயசில் இருந்தே, கதை சொல்வது பிடிக்கும். அந்த காலத்து பொருட்களை எங்கே பார்த்தாலும், அதப்பத்தி தெரிஞ்சுக்குவேன். 2டி, 3டி பொம்மைகள் செய்கிற பயிற்சியையும் எடுத்துட்டு இருக்கேன். சின்ன சின்ன பொம்மைகள் செய்வதை பழக்கமாவே வச்சிருக்கேன். ஓவிய ஆசிரியர் கனகராஜ், பயிற்சி கொடுக்கிறார்" என்றார்.ஓவிய ஆசிரியர் கனகராஜ், ''ஏழ்மை, நடுத்தர நிலைமைல இருக்க குழந்தைகள் தான் இங்க படிக்கிறாங்க. ஆனா, அவங்க கிட்ட நிறைய திறமை இருக்கு. மாவட்ட, மாநில அளவில் ஜெயிச்ச கோகுல் பாரதியின் திறமையை, கொஞ்சம் பட்டை தீட்டி விட்டோம். அவனோட முயற்சியால இந்த சாதனை செய்திருக்கான். வெறும் பொம்மை தானே செய்றான், சும்மா கதை தானே சொல்றான் என்பதல்ல விஷயம்.அந்த கற்பனை திறன் சார்ந்தது தான். 'அனிமேஷன் துறை; அந்த துறையில், இந்த மாதிரி மாணவர்கள் சுலபமா ஜெயிச்சுடுவாங்க. அழியும் நிலையில இருக்க, நம் பாரம்பரியம், கலாசாரத்தை மாணவ சமுதாயம் தான் கட்டி காப்பத்தணும்.பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜின் ஊக்குவிப்பு, ஒத்துழைப்புடன், மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். இனியும் நிறைய சாதிப்பாங்க,'' என்றார் கண்களில் நம்பிக்கை ஒளிர.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE